திருவள்ளூர்:சென்னை, திருவேற்காடு எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டத்தின் சார்பாக நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள் குழந்தைத் திருமணம் அற்ற இந்தியாவை உருவாக்குவோம் எனும் தலைப்பில், விளம்பரப் பதாகைகளை ஏந்தி மனிதச் சங்கிலியாக கல்லூரி வளாகத்திற்கு வெளியே பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் அமைத்து இருந்தனர்.
இந்நிகழ்ச்சியை தொடர்ந்து மனித கடத்தல் மற்றும் மனித வியாபாரம் தடுப்பு சார்ந்த விழிப்புணர்வுக் கருத்தரங்கம் நேற்று நடந்தது. கல்லூரி தாளாளர் ப.வெங்கடேஷ் ராஜா தலைமை தாங்கினார். கல்லூரி இயக்குநர் முனைவர் சாய் சத்யவதி முன்னிலை வகித்தார். முதல்வர் முனைவர் மாலதி செல்வக்குமார் வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில், மனிதக் கடத்தல் தடுப்பு பன்னாட்டு நிபுணர், ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி பி.எம்.நாயர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர், மாணவ, மாணவியருக்கு மனிதக் கடத்தல் மற்றும் மனித வியாபாரத் தடுப்பு பற்றியும், குழந்தைத் திருமணத் தடுப்பின் அவசியம் பற்றியும் எடுத்துரைத்தார். தன்னார்வத் தொண்டு நிறுவன இயக்குநர் மாலிம் நடாஷா கலந்துகொண்டு பேசினார்.
இந்த விழா நிறைவில், குழந்தை திருமணத்தை தடுக்கும் வகையிலான விழிப்புணர்வு உறுதி மொழியினைக் கல்லூரி மாணவர்கள் 1000 பேர் எடுத்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியினை ஐசிடபுள்யுஓ செயலாளர் ஹரிஹரன், நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் விஜயகுமார் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடதக்கது.