திருவள்ளூர்: திருவேற்காடு எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் காட்சித் தொடர்பியல் துறை கல்லூரி தாளாளர் ப.வெங்கடேஷ் ராஜா உத்தரவின் பேரில், கூகை சர்வதேச திரைப்பட விழாவினை கல்லூரி திரையரங்கில் ஏற்பாடு செய்திருந்தது. காட்சித் தொடர்பியல் துறைத்தலைவர் ஆர்.சீனிவாசன் வரவேற்றார். விழாவில் சினிமா இயக்குநர் செல்வராமன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பல்வேறு சிறந்த திரைப்படங்களை காட்சிப்படுத்துவதில் தம் உறுதிப்பாட்டை எடுத்துரைத்தார்.
இதனைத் தொடர்ந்து சிறந்த திரைப்படம் உட்பட பல விருதுகளை வென்ற தமிழ் திரைப்படம் ஜமா திரையிடப்பட்டது. பார்வையாளர்கள் ஸ்கைப் மூலம் படக்குழுவினருடன் பாரம்பரியக் கலை வடிவமான தெருக்கூத்தின் மறுமலர்ச்சி குறித்து விவாதித்தனர். பனிப்போரில் இருந்து தப்பிக்கும் ஜெர்மன் திரைப்படமான பலூன் திரைப்படம் திரையிடப்பட்டது. அத்திரைப்படத் தயாரிப்பாளர்களுடன் பார்வையாளர்கள் கலந்துரையாடி மகிழ்ந்தனர். தமிழ்த் திரைப்பட வரலாற்றை மட்டுமல்லாது உலகத் திரைப்பட வரலாற்றையும் மாணவர்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் இந்த நிகழ்ச்சி அமைந்தது குறிப்பிடத்தக்கது.