கோவை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் மகன் திருமணத்தில் பங்கேற்ற அண்ணாமலை, அதிமுக தலைவர்களை சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சர்கள் சிலருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதாக கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமியின் பெயரை பயன்படுத்தாமல் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கடந்த சில வாரங்களாக பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். அன்னூரில் எடப்பாடிக்கு நடந்த பாராட்டு விழாவில் அவர் பங்கேற்கவில்லை. சென்னையில் அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளிலும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சிலர் புறக்கணிப்பு செய்தனர்.
அதிமுகவில் உள்ள சில முன்னாள் அமைச்சர்கள், பாஜவுடன் அதிமுக கூட்டணி சேர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால், எடப்பாடி பழனிசாமி அதற்கு பிடிகொடுக்காமலேயே உள்ளார். இது அதிமுகவில் ஒரு முரண்பாடான செயலாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சரும், கோவை தொண்டாமுத்தூர் தொகுதி எம்எல்ஏவுமான எஸ்.பி. வேலுமணியின் மகன் திருமணம் நேற்று ஈச்சனாரி பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் அரசியல் கட்சித் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், நிர்வாகிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர்களான செங்கோட்டையன், தங்கமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோரும் இந்த விழாவில் பங்கேற்றனர். விழாவில் பாஜ மாநிலத் தலைவர் அண்ணாமலையும் பங்கேற்றார். விழாவுக்கு வந்த அண்ணாமலை அங்கு அமர்ந்திருந்த விருந்தினர்கள் பக்கம் சென்றார். அங்கு செங்கோட்டையன், தங்கமணி ஆகியோர் அமர்ந்திருந்தனர். அண்ணாமலை அருகில் வந்ததும் அவர்கள் எழுந்து அண்ணாமலையுடன் சிரித்து பேசினர். மணமக்களை வாழ்த்துவதற்காக மேடைக்கு சென்ற அண்ணாமலையை எம்எல்ஏ எஸ்.பி. வேலுமணி கைகுலுக்கி வரவேற்றார். இந்த திருமண விழாவில் ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகனும் பங்கேற்றார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள், அண்ணாமலையை சந்தித்த விவகாரம் பரபரப்பாக பேசப்படுகிறது.