தமிழகத்தில் சாகுபடியாகும் மிக சிறுதானியங்களில் கம்பு தற்போது அதி முக்கியத்துவம் பெற்று வருகிறது. பயிர் சாகுபடி முறையிலும், உணவாகவும் பல நன்மை களைக்கொண்டிருப்பதால் இத்தகைய முக்கியத்துவம் கம்புக்கு கிடைத்து வருகிறது. குறைந்த தண்ணீரே இதற்கு போதும் என்பது கம்பு சாகுபடியில் இருக்கும் மிகப்பெரிய வரம். உணவாக உண்ணப்படும் தானியங்களில் 12 சதவீத புரதம் கம்பில் உள்ளது. கொழுப்பு 5 சதவீதமும், மாவுப்
பொருள் 67 சதவீதமும் நிறைந்திருக்கிறது. இதுதவிர கால்சியம் மற்றும் பாஸ் பரஸ் சத்துக்கள் மற்ற தானியங்களைக் காட்டிலும் இதில் அதிகம். மானாவாரி நிலங்களில் வாழும் விவசாயப் பெருமக்களின் மிக முக்கியமான உணவும் கம்புதான்.
மற்ற தானியங்களை விட மாவுப் பொருள் குறைவாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு இது மிகவும் ஏற்ற உணவு. மேலும் கோடைக்கு இதமாக உள்ளதாலும் மலிவு விலையாக இருப்பதாலும் கம்பில் இருந்து சோறு, கூழ், அடை, புட்டு , நூடுல்ஸ், சேமியா, கம்பு தயிர்சாதம், தோசை, குக்கீஸ், பிஸ்கட், போன்ற மதிப்பு கூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிக்கப்பட்டு மக்களால் விரும்பி உண்ணப்படுகிறது. இத்தகைய கம்புப்பயிரை கோடையில் இறைவைப் பயிராக சாகுபடி செய்யும் நுட்பத்தை விளக்குகிறார் தருமபுரி உழவர் பயிற்சி நிலையத்தின் வேளாண்மை துணை இயக்குநர் வி.குணசேகரன்.
பருவம்
அதிக குளிரான பருவம் கம்பு பயிரிட உகந்தது அல்ல. மானாவாரியாக ஆடி, புரட்டாசி மற்றும் ஐப்பசி பட்டங்களில் பயிரிடலாம். இறைவையில் சாகுபடி செய்ய தை மற்றும் சித்திரைப் பட்டம் உகந்தது. கம்பில் அயல் மகரந்தச் சேர்க்கை மூலம் இனவிருத்தி செய்வதால் பூக்கும் தருணத்தில் மழை இருந்தால் மகசூல் பாதிக்கும்.
நிலம் தயாரிப்பு
வளம் குறைந்த மண்ணிலும் கம்பு நன்றாக வளரும். மானாவாரியில் கரிசல் பூமியில் நல்ல மகசூல் கிடைக்கிறது. இருப்பினும் நல்ல வடிகால் வசதியுள்ள 6.2 – 8 வரை அமில காரநிலையுள்ள மண்ணில் நன்கு வளரும். இறைவைப் பயிருக்கு இரண்டு அல்லது மூன்று முறை கட்டிகள் இல்லாமல் நன்கு உழவு வேண்டும். மேலும் கடினமான அடி மண் உள்ள பகுதிகளில் உளிக்கலப்பை கொண்டு அடிமண் இறுக்கத்தை நீக்குவதால் மண்ணின் நீர்பிடிப்புத் தன்மை கூடும். பாசன வசதி மற்றும் நிலத்தின் தன்மைக்கேற்ப பாத்திகள் அல்லது பார்கள் அமைத்து நடவு செய்யலாம்.
கடைசி உழவின்போது ஹெக்டேருக்கு 10 பாக்கெட் அசோஸ்பைரில்லம், 10 பாக்கெட் பாஸ்போ பாக்டீரியாவை 25 கிலோ தொழுஉரத்துடன் கலந்து இட வேண்டும். 12.5 கிலோ நுண்ணூட்டக் கலவையினை 50 கிலோ மணலுடன் கலந்து கடைசி உழவிற்குப் பிறகு சீராக தூவ வேண்டும்.
ரகங்கள்
கோ 7, ஐசிஎம்வி 221, டிஎன்ஏயு வீரிய ஒட்டு 9, ராஜஸ்தான் கம்பு ஆகிய ரகங்கள் இந்தப் பட்டத்திற்கு தோதானவை.
விதையளவும் விதைப்பும்
விதைகளை 3 பொட்டலம் அசோஸ்பைரில்லம், 3 பொட்டலம் பாஸ்போ பாக்டீரியாவுடன் கலந்து நிழலில் உலர்த்திய பின் விதைக்கலாம்.
ஹெக்டேருக்கு 5 கிலோ விதைகள் வரை விதைப்பதற்கு தேவைப்படும். 7.5 சென்ட் அளவிற்கு நாற்றங்கால் தயார் செய்து விதை நேர்த்தி செய்த விதைகளை நாற்று விட்டு 15-18 நாள் வயதான நாற்றுக்களை நடவு செய்யலாம். இறைவையில் நேரடியாக விதைப்பதற்கு பதில் நாற்று விட்டு நடுவதால் அதிக மகசூல் கிடைக்கும். இதனால் பயிர் எண்ணிக்கையைப் பராமரிப்பதுடன் தரமான பூச்சி, நோய் தாக்காத நாற்றுக்களை சரியான இடைவெளியில் நடவு செய்யலாம். இதனால் அதிக தூர்கள் விடும். அதிக மகசூல் கிடைக்கும். விரைவில் முதிர்ச்சி அடையும். வரிசைக்கு வரிசை ஒன்றரை அடி இடைவெளியிலும், செடிக்குச் செடி அரையடி இடைவெளியிலும் பாரின் ஒரு பக்கமாக 3-5 செ.மீ ஆழத்திலும் நடலாம்.
உரமிடல்
எக்டருக்கு 12.5 டன் தொழுஉரம் அல்லது மக்கிய தென்னை நார்க்கழிவு உரம் இட வேண்டும். மண் ஆய்வுப்படி ரசாயன உரமிட வேண்டும். இல்லையெனில் பொதுப் பரிந்துரையாக 70-35-35 கிலோ அளவு தழை, மணி, சாம்பல் சத்துக்களை தரவல்ல ரசாயன உரங்களை (ஹெக்டேருக்கு) இடலாம். வீரிய ஒட்டு ரகங்களுக்கு 80-40-40 கிலோ அளவு தழை, மணி, சாம்பல் சத்துக்கள் தரவல்ல ரசாயன உரங்களை இடலாம்.
இதில் 50 சதவீத தழைச்சத்து மற்றும் முழு அளவு மணி மற்றும் சாம்பல் சத்துக்களை அடியுரமாக இட வேண்டும். மீதமுள்ள தழைச்சத்தினை நட்ட 30 நாட்கள் கழித்து இடலாம். உரங்களை பாரின் இருபுறமும் இட்டு மண்ணால் மூட வேண்டும். இதுதவிர சிறுதானியப் பயிர்களுக்கான நுண்ணூட்டம் 12.5 கிலோவை 50 கிலோ மணலுடன் கலந்து நடவிற்கு முன் சீராக தூவ வேண்டும். மேற்கண்ட நுண்ணூட்டம் இல்லாதபோது 25 கிலோ துத்தநாக சல்பேட் உரத்தினை 50 கிலோ மணலுடன் கலந்து சீராக தூவலாம்.
(இதன் தொடர்ச்சி அடுத்த இதழில் இடம்பெறும்)