Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

உக்ரைனுக்கு எதிரான போரை நிறுத்தாவிடில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: ரஷ்ய அதிபர் புடினுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை

வாஷிங்டன்: ரஷ்யா-உக்ரைன் போர் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த போரால் இரு தரப்பிலும் வீரர்கள், பொதுமக்கள் என லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். எனினும், போர் முடிவுக்கு வந்தபாடில்லை. இந்நிலையில், இந்தாண்டு ஜனவரியில் அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பின்னர், ‘ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் மத்தியஸ்தம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். தற்போது இந்த விவகாரம் தொடர்பாக ரஷ்ய அதிபர் புடின் இறங்கி வந்துள்ளார். அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் நாளை அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புடின் நேரில் சந்தித்து பேசுகின்றனர். இந்த சந்திப்பில் உக்ரைன் அமைதி ஒப்பந்தம் பற்றி ஆலோசனை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை டிரம்ப், அவருடைய ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில் உறுதிப்படுத்தினார்.

கடந்த 4 ஆண்டுகளில் முதன்முறையாக இரு தலைவர்களும் நேருக்கு நேராக சந்தித்து ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளனர். இந்நிலையில், வெள்ளை மாளிகையில் டிரம்ப் பேசும்போது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் சந்திப்பு ஒன்றை நடத்த இருக்கிறோம். முதல் 2 நிமிடங்களிலேயே ஒப்பந்தம் ஏற்படுமா? இல்லையா? என்பது எனக்கு சரியாக தெரிந்து விடும். இந்த கூட்டம் நல்ல முறையில் நடக்க போகிறது. நாம் இன்னும் முன்னேறி செல்வோம். ஒப்பந்தம் ஏற்படுத்துவோம். மிக மிக விரைவில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படும். அதனை உடனடியாக பார்க்க விரும்புகிறேன்’ என்றார். இந்நிலையில், நேற்று கென்னடி மையத்தில் நிருபரின் கேள்விக்கு டிரம்ப் பதிலளித்தார். அப்போது, உக்ரைனுக்கு எதிரான போரை ரஷ்யா நிறுத்த ஒப்புதல் அளிக்கவில்லை என்றால் என்னவாகும்? என கேள்வி எழுப்பினார்.

அதற்கு டிரம்ப், ‘மிக கடுமையான விளைவுகள் ஏற்படும். ஆம். கடுமையான விளைவுகள் இருக்கும். அது எப்படி இருக்கும் என கூற வேண்டி இருக்காது. மிக கடுமையான ஒன்றாக இருக்கும். முதல் கூட்டம் நன்றாக நடந்தால், உடனடியாக 2வது கூட்டம் ஒன்றை நடத்துவோம். இது அதிக ஆக்கப்பூர்வ ஒன்றாக இருக்கும். உடனடியாக அதனை நடத்தவே விரும்புவேன். நான் விரும்பிய பதில்கள் கிடைக்கவில்லை என்றால் 2-வது கூட்டம் நடைபெறாது’ என்றார். மேலும் புடின் மற்றும் ஜெலன்ஸ்கி பங்கேற்கும் முத்தரப்பு கூட்டத்திற்கான சாத்தியம் பற்றியும் அவர் குறிப்பிட்டார். அதிபர் புடின், அதிபர் ஜெலன்ஸ்கி விரும்பினால் நானும் கூட்டத்தில் பங்கேற்பேன் என்றும் கூறினார்.

உக்ரைன் தாக்குதல்: ரஷ்யா குற்றச்சாட்டு

கீவ், உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போர் நீடித்து வரும் நிலையில் ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட செய்தியில், ‘ரஷ்ய-அமெரிக்க தலைவர்களின் சந்திப்பு நெருங்கி வரும் சூழலில், ரஷ்ய பகுதிகளில் தன்னுடைய பயங்கரவாத நடவடிக்கைகளை உக்ரைன் அரசு தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த வாரத்தில் உக்ரைன் நடத்திய எறிகுண்டு மற்றும் டிரோன் தாக்குதல்களில் 22 பேர் பலியானார்கள். 105 பேர் காயமடைந்துள்ளனர்’ என்று கூறப்பட்டுள்ளது. உக்ரைன் தாக்குதலால் பாதிக்கப்பட்ட ரஷ்யாவின் எல்லை பகுதிகளை அடையாளப்படுத்தும் வரைபடம் ஒன்றையும் அமைச்சகம் பகிர்ந்துள்ளது.

உக்ரைன் ஒருபோதும் அமைதியை கோரவில்லை என்றும் பகைமையை நீட்டிப்பது மற்றும் அதிகாரத்தில் ஒட்டி கொள்வதற்கான ஒரு வழியாகவே பேச்சுவார்த்தையை பார்க்கிறது என்றும் தெரிவித்துள்ளது. அலாஸ்காவின் ஆங்கரேஜ் நகரில் எல்மென்டார்ப்-ரிச்சர்ட்சன் கூட்டு படை தளத்தில் நாளை நடைபெற உள்ள போர்நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதனால் மோதல் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.