கீவ்: பிரதமர் மோடி இன்று உக்ரைன் தலைநகர் கீவ் சென்ற நிலையில், அவருடன் அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். பிரதமர் மோடி இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக போலந்து சென்ற நிலையில், தலைநகர் வார்சாவில் அந்நாட்டு பிரதமர் டொனால்ட் டஸ்க்-கை சந்தித்துப் பேசினார். இரு தலைவர்களும் சர்வதேச விவகாரங்களில் இணைந்து செயல்படுதல், சர்வதேச அமைப்புகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளல், சர்வதேச நிறுவனங்கள் உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும் திறனைக் கொண்டிருப்பது, ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளில் விரைவான சீர்திருத்தம் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினர். இந்தியா – போலந்து இடையேயான உறவை வலுவான கூட்டாண்மை நிலைக்கு கொண்டு செல்லுதல், பல்வேறு துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்புக்கான பேச்சுவார்த்தைகள் நடந்தன.
நேற்றோடு போலந்து பயணத்தை முடித்துக்கொண்ட மோடி, அங்கிருந்து `ரயில் ஃபோர்ஸ் ஒன்’ எனும் ரயிலில் 20 மணிநேரம் பயணம் மேற்கொண்டு உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கு இன்று காலை சென்றடைந்தார். அவரை இந்திய வம்சாவளியினர், அந்நாட்டு அதிகாரிகள் வரவேற்றனர். ெதாடர்ந்து கீவ்வில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்த மோடியை, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்தார். இந்த சந்திப்பில், இரு நாடுகளுக்கு இடையில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. தற்போதைய போர் சூழல் குறித்தும் விவாதிக்கப்பட்டது. கடந்த 1991ம் ஆண்டு சோவியத் யூனியனில் இருந்து சுதந்திரம் பெற்ற உக்ரைனுக்கு முதன் முறையாக இந்தியப் பிரதமர் ஒருவர் பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும்.
கடந்த 6 வாரங்களுக்கு முன் மேற்கத்திய நாடுகளின் கடும் விமர்சனங்களுக்கு மத்தியில், பிரதமர் மோடி ரஷ்யா சென்று அந்நாட்டு அதிபர் புதினைச் சந்தித்தபோது, `உக்ரைன் பிரச்னைக்குப் போர்க்களத்தில் தீர்வு காண முடியாது. வெடிகுண்டுகள் மற்றும் தோட்டாக்களுக்கு மத்தியில் அமைதி பேச்சுவார்த்தை வெற்றியடையாது’ என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் மோடி உக்ரைன் சென்றிருப்பது சர்வதேச அரசியல் வட்டாரத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே ஐநா பொதுச் செயலாளர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘இந்தியப் பிரதமரின் உக்ரைன் பயணம், ரஷ்யாவுடனான போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை இந்தியா கண்டிக்கவில்லை என்றாலும், பிரதமர் மோடியின் பயணம் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி இன்று தனது உக்ரைன் பயணத்தை முடித்துக் கொண்டு தாயகம் திரும்புவார் என்று வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.