ரஷ்யா: உக்ரைன் வான்படை நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் ரஷ்ய படையில் இருந்த கேரள மாநில இளைஞர் உயிரிழந்த சமபவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் – ரஷ்யா போர் 3வது ஆண்டாக நீடித்து வருகிறது. இந்த போரில் உக்ரைனின் பல நகரங்கள் சிதிலமடைந்து விட்டன. ஏராளமான அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பதும் நீடித்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர ஐநா மற்றும் சில நாடுகள் எடுக்கும் சமாதான நடவடிக்கைள் எதுவும் பயன் தரவில்லை.
இந்த போரில் ஆரம்பத்தில் பலத்த அடி வாங்கிய உக்ரைன் தற்போது ரஷ்யா மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. அதன்படி ரஷ்யாவின் முக்கிய இலக்குகளை குறி வைத்து அவ்வப்போது ஆளில்லா விமானங்கள், ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் ரஷ்ய எல்லையில் உள்ள ரஸ்தோ என்ற இடத்தில் உக்ரைன் வான்படை குண்டுகளை வீசியது. அதில் 11 ரஷ்ய வீரர்களுடன் கேரள மாநிலம் திருச்சுற்றி அடுத்த கண்ணூர் என்ற கிராமத்தை சேர்ந்த சந்தீப் என்ற 36 வயது இளைஞரும் உயிரிழந்தார். இறந்தவர் சந்தீப் தான் என்று அங்குள்ள மலையாள சங்கங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
உணவகத்தில் வேலை என்று கூறி கடந்த ஏப்ரல் மாதம் ரஷ்யா அழைத்து செல்லப்பட்ட சந்தீப் கட்டாயத்தின் பேரில் ரஷ்ய படையில் சேர்க்கப்பட்டாரா?, அல்லது விருப்பத்தின் பேரில் ராணுவத்தில் இணைந்தாரா? என்பது தெரியவில்லை. குடியுரிமை வேண்டுவோர் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றுவது ரஷ்யாவில் நடைமுறையில் உள்ள நிலையில் இது போன்று தம்மை இணைத்துக் கொண்டாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ரஷ்ய ராணுவத்தில் இந்தியர்கள் கட்டாயமாக சேர்க்கப்பட்டுள்ளதாக இந்தியா குற்றம் சாட்டி வரும் நிலையில் இளைஞரின் மரணம் அதை மேலும் உறுதிப்படுத்தி உள்ளது.