மாஸ்கோ: மூன்றாண்டுகளை கடந்தும் முடிவின்றி நீடிக்கும் உக்ரைன் ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா மற்றும் பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து மற்றும் போலந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. பேச்சுவார்த்தையில், உக்ரைன் ரஷ்யா போரில் உயிரிழந்த இருநாடுகளை சேர்ந்த 6,000 வீரர்களின் உடல்களை பரிமாறி கொள்ள பரஸ்பரம் இருநாடுகளும் சம்மதம் தெரிவித்திருந்தன. இந்நிலையில் தற்போது 6,000 ரஷ்ய வீரர்கள் உடலை ஒப்படைப்பதில் உக்ரைன் காலதாமதம் செய்வதாக ரஷ்யா குற்றம்சாட்டி உள்ளது.
இதுகுறித்து ரஷ்ய பேச்சுவார்த்தை குழுவை சேர்ந்த லெப்டினன்ட் ஜெனரல் அலெக்சாண்டர் சோரின் கூறுகையில், “உக்ரைன் ஆயுதப்படை வீரர்களின் 1,212 உடல்களை கொண்ட முதல் தொகுதியை உக்ரைன் எல்லையில் உள்ள பரிமாற்ற இடத்துக்கு அனுப்பி விட்டோம்” என்றார். இந்த தகவலை ரஷ்ய அதிபர் புடினின் உதவியாளர் விளாடிமிர் மெடின்ஸ்கி உறுதிப்படுத்தி உள்ளார். ஆனால், ரஷ்ய வீரர்களின் உடல்களை உடனே ஒப்படைப்பதற்கு உக்ரைன் கடைசி நிமிடத்தில் மறுப்பு தெரிவித்து விட்டது” என குற்றம்சாட்டி உள்ளார். ஆனால் ரஷ்யாவின் குற்றச்சாட்டுக்கு உக்ரைன் மறுப்பு தெரிவித்துள்ளது.