மாஸ்கோ: ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவரான அலெக்ஸி நவல்னி, ஊழலுக்கு எதிரான தனது அறக்கட்டளை மூலமாக பணத்தை முறைகேடாகக் கையாடல் செய்ததாகக் கூறி 2013ம் ஆண்டு அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் மாஸ்கோ நீதிமன்றம் கடந்த 2021ம் ஆண்டு அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. தொடர்ந்து மோசடி மற்றும் நீதிமன்ற அவமதிப்பு ஆகிய குற்றங்களுக்காக அலெக்ஸி நவல்னிக்கு 9 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் அவர் மீது பதிவு செய்யப்பட்ட பிற வழக்குகளான தீவிரவாதத்தை தூண்டுதல் மற்றும் நிதியளித்தல், சட்டவிரோத தன்னார்வ தொண்டு நிறுவனத்தை உருவாக்குதல், நாஜிக் கொள்கைகளுக்கு புத்துயிர் கொடுத்தல் மற்றும் ஆபத்தான செயல்களுக்கு குழந்தைகளை தூண்டுதல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் அவர் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் அவருக்கு கூடுதலாக 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது சிறையில் இருக்கும் அவர், மொத்தம் 30 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தகவல்கள் கூறுகின்றன.