மாஸ்கோ: ரஷ்யாவின் கூா்ஸ்க் பிராந்தியத்துக்குள் உக்ரைன் ராணுவம் தொடர்ந்து முன்னேறிவரும் நிலையில், அண்டை பிராந்தியமான பெல்கொரோடிலும் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது கடந்த 2022 பிப்ரவரி 24ம் தேதி ரஷ்யா போர் தொடுத்த நிலையில் 3 ஆண்டுகளை கடந்தும் போர் நீடிக்கிறது. இந்த போரில் உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியது. இருப்பினும் ரஷ்யாவை எதிர்த்து உக்ரைன் போராடி வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் உதவி அளித்து வருவதால் உக்ரைன் அவ்வப்போது ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.
போரை நிறுத்துமாறு சர்வதேச நாடுகள் நேரடியாக ரஷ்யாவை வலியுறுத்தியபோதிலும் ரஷ்யா தனது தாக்குதலைத் தொடர்ந்த வண்ணமே இருக்கிறது. இந்த சூழலில் கடந்த 6ம் தேதி ரஷ்யாவின் எல்லைப் பிராந்தியமான கூர்ஸுக்குள் பீரங்கிகள் மற்றும் கவச வாகனங்களுடன் சுமார் 1,000 உக்ரைன் படையினர் சமீபத்தில் நுழைந்தனர். உக்ரைன் படையினர் அங்கு ஒரு வாரமாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் இருந்த மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், அந்த பிராந்தியத்தில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் தாக்குதலில் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், பொதுமக்கள் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிகிறது. இதனிடையே உக்ரைன் கட்டுப்பாட்டுக்குள் சுமார் 1,000 சதுர கி.மீ. ரஷ்ய நிலப்பகுதி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கூர்ஸ்க் பிராந்தியத்துக்குள் உக்ரைன் ராணுவம் தொடர்ந்து முன்னேறிவரும் நிலையில், அண்டை பிராந்தியமான பெல்கொரோடிலும் உக்ரைன் ஊடுருவலைத் தடுப்பதற்காக அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.