இஸ்தான்புல்: ரஷ்யாவும் உக்ரைனும் மாறி மாறி பயங்கர தாக்குதல் நடத்தி கொண்ட மறுநாள் இஸ்தான்புல்லில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில் இரு நாடுகளும் சிறை பிடிக்கப்பட்ட இளம் ராணுவ வீரர்கள், படுகாயமடைந்த வீரர்களை பரஸ்பரம் விடுவிக்க ஒப்பு கொண்டுள்ளனர். ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கிய 3 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடந்த 1ம் தேதி இரு நாடுகளும் பெருமளவில் தாக்குதலை நடத்தி கொண்டன. இதுவரை இல்லாத வகையில் 472 டிரோன்கள் மூலம் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை நடத்தியது.
அதேநாளில் சுமார் ஒன்றரை ஆண்டு திட்டமிடலுக்கு பின் ஆர்க்டிக், சைபீரியா உள்ளிட்ட ரஷ்ய பகுதிகளில் உள்ள ராணுவ விமான படை தளங்கள் மீது டிரக்குகளில் இருந்த டிரோன்களை ஏவி நடத்தப்பட்ட தாக்குதலில் 40 விமானங்கள் சேதமடைந்தன. இந்த சூழலில் ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் இரு நாடுகளுக்கு இடையேயான 2வது அமைதி பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. துருக்கியின் மேற்பார்வையில் சுமார் ஒரு மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தையில் மனிதாபிமான நடைமுறை தொடர வித்திட்டுள்ளது.
நிபந்தனையற்ற 30 நாள் போர் நிறுத்தம், கைதிகள், இளம் ராணுவ வீரர்கள் மற்றும் குழந்தைகளை விடுவிக்க கோரும் திட்டத்தை ரஷ்யாவிடம் உக்ரைன் வழங்கியது. இரண்டு அல்லது மூன்று நாட்கள் போர் நிறுத்தத்திற்கு மட்டும் ஒப்பு கொண்ட ரஷ்யா, போரில் உயிரிழந்த 6,000 உக்ரைன் ராணுவ வீரர்களின் உடல்களை ஒப்படைப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது. அதேநேரம் 18லிருந்து 25 வயதுக்குட்பட்ட இளம் ராணுவ வீரர்கள் மற்றும் படுகாயமுற்ற வீரர்களை பரஸ்பர மாற்றி கொள்ள இரு நாடுகளும் ஒப்பு கொண்டுள்ளன.