சென்னை: ஊரகப்பகுதிகளில் ஏற்படும் குறைகளைக் களையும் பொருட்டு “ஊராட்சி மணி” என்கிற அமைப்பு ஊரக வளர்ச்சி ஊராட்சித் துறையால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், பொது மக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்க ஊராட்சிகளைத் தொடர்பு கொள்ளும் வகையில் ஒரு இலவச குறை தீர்வு அழைப்பு எண் “155340” பிரத்யேகமாக மாநில அளவில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இம்முறை மூலம் பொதுமக்கள் மிக எளிமையாக தொலைபேசி (155340), வலைதளம் (Ooratchimani.in) மூலம் எளிதாக அணுக முடியும். மேலும் பெறப்படும் புகார்களின் தன்மைக்கேற்ப அலுவலக ரீதியிலான கால தாமதம் தவிர்க்கப்பட்டு குறிப்பிட்ட காலவரையறைக்குள் அப்புகார் மீது எளிய முறையில் உடனடித் தீர்வு காணப்படும்.
மேலும் ஊராட்சி பிரதிநிதிகள் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் ஆகியோருக்கு ஏற்படும் குறைகளையும், சந்தேகங்களையும் இந்த ஊராட்சி மணி மூலம் அணுகி பதில் பெறும் வகையில் இச்சேவை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமியால் இன்று காலை 11.00 மணி அளவில் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் போது ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை முதன்மை செயலாளர், ப.செந்தில்குமார், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர் பா.பொன்னையா, கூடுதல் இயக்குநர்(பொது), எம்.எஸ்.பிரசாந்த், மற்றும் இதர அலுவலர்கள் பங்கேற்றனர்.