திருவள்ளூர்: சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அலமாதி ஊராட்சி பகுதியில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் பண்ணை குட்டை பணிகள் நடைபெற்று வருவதை கலெக்டர் பிரபுசங்கர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 126 பண்ணை குட்டை பணிகள் நடந்து வருகின்றன. இதேபோல் கும்மிடிபூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் 152, கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 61, மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தில் 152, பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் 36, பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்தில் 12, பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் 99, ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 78, சோழவரம் ஊராட்சி ஒன்றியத்தில் 80, திருத்தணி ஊராட்சி ஒன்றியத்தில் 86, திருவலங்காடு ஊராட்சி ஒன்றியத்தில் 52, திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியத்தில் 41, வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் 8 என மொத்தம் 934 பண்ணை குட்டைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பண்ணை குட்டைகளை கலெக்டர் பிரபுசங்கர் நேற்று முன்தினம் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த பண்ணை குட்டைகள் அமைப்பதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயரும். மழைக்காலங்களில் பண்ணை குட்டைகள் மூலம் சேமிக்கப்பட்ட நீர் கோடை காலங்களில் பற்றாக்குறையை தீர்க்கும். மேலும், பண்ணை குட்டை மீன் குஞ்சுகளை வளர்த்து பயன்பெறலாம். தற்பொழுது திட்டப்பணி 100 நாள் வேலையாட்கள் கொண்டு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. எனவே, திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாய பெருங்குடி மக்கள் இத்திட்டத்தினை பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயக்குமார், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் செந்தில்குமார், ஊராட்சிகள் உதவி இயக்குநர் பரணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாணிக்கம், சாந்தினி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.