பொள்ளாச்சி : பொள்ளாச்சி பகுதியில் தக்காளி சாகுபடி செய்யும் விவசாயிகள்,தக்காளி செடி மண்ணில் விழுந்து அழுகி விடாமல் இருக்கவும்,மழையிலிருந்து பாதுகாக்கவும் கொடி கட்டும் பணியில் ஈடுபடுகின்றனர். பொள்ளாச்சி சுற்று வட்டார கிராம பகுதிகளில் காய்கறி சாகுபடி அதிகளவு உள்ளது.அதிலும், ஒவ்வொரு ஆண்டும் 4 மாதத்திற்கு ஒருமுறை தக்காளி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
அதிலும், வடக்கிபாளையம், புரவிபாளையம், ஜமீன் காளியாபுரம்,பெரும்பதி,கோவிந்தனூர்,மாப்பிள்ளைகவுண்டன்புதூர்,சூலக்கல்,நெகமம்,கோமங்கலம், தேவனூர்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி சாகுபடி அதிகளவு உள்ளது. இந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழையை எதிர்நோக்கி சாகுபடி செய்யப்பட்ட தக்காளி, கடந்த செப்டம்பர் மாதத்தில் நன்கு விளைந்ததையடுத்து, சுமார் ஒருமாதமாக தக்காளிகள் அறுவடை பணி அதிகமாக இருந்தது.
இதனால் அந்நேரத்தில் மார்க்கெட்டுக்கு,உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து கொண்டு வரப்பட்ட தக்காளி பெட்டிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததுடன், சில வாரமாக குறைவான விலைக்கு விற்பனையானது. பல்வேறு கிராமங்களில் தக்காளி அறுவடை நிறைவடைந்ததையடுத்து, கடந்த அக்டோபர் மாதம் துவக்கத்திலிருந்து புதிதாக தக்காளி சாகுபடியில் விவசாயிகள் இறங்கியுள்ளனர்.வடகிழக்கு பருவமழை இன்னும் பெய்யும் என எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர். இதனால், கன மழை பெய்யும் போது, செடிகள் கீழே சாயாமல் இருக்கவும், தக்காளியை காத்து கொள்ளவும் கொடி அமைக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். அன்மையில் சாகுபடி செய்யப்பட்ட தக்காளி செடிகள் டிசம்பர் மாதம் இறுதியில் அறுவடைக்கு வந்து விடுவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.