Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பல லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்ட 10 பேர் உள்பட சட்டீஸ்கரில் 18 நக்சல்கள் சரண்

சுக்மா: சட்டீஸ்கரில் பல லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டிருந்த 10 பேர் உள்பட 18 நக்சல்கள் சரணடைந்தனர். சட்டீஸ்கரில் நக்சல்கள் நடமாட்டத்தை முடிவுக்கு கொண்டு வர ஒன்றிய, மாநில அரசுகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. சட்டீஸ்கரில் அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் நக்சல் தீவிரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

நக்சல் அபாயம் இல்லாத கிராமங்களுக்கு செல்போன் இணைப்பு, மின்சார இணைப்பு மற்றும் ரூ.1 கோடி வளர்ச்சி நிதி ஒதுக்கப்படும் என சட்டீஸ்கர் அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. மேலும் நக்சல்கள் சரணடைந்தால் அவர்களுக்கு உணவு, தங்குமிடம், திறன் மேம்பாட்டு பயிற்சி ஆகியவை இலவசமாக வழங்கப்படும் என சட்டீஸ்கர் அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் சட்டீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் நேற்று 18 நக்சல்கள் பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்தனர்.

நக்சல்களின் வெற்று, மானிதாபிமானமற்ற சித்தாந்தங்கள் மற்றும் உள்ளூர் பழங்குடியினர் மீதான தீவிரவாத அட்டூழியங்களால் ஏமாற்றமடைந்து தாங்கள் சரணடைந்ததாக நக்சல்கள் தெரிவித்தனர். இதுகுறித்து சுக்மா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் சவான் கூறுகையில், “நக்சல் பாதிப்பு பகுதிகளில் கொண்டு வரப்பட்டுள்ள உங்கள் நல்ல கிராமம் திட்டத்தால் ஈர்க்கப்பட்டு 18 பேரும் சரணடைந்துள்ளனர். அவர்களில் மட்காம் ஆய்தா, பாஸ்கர் என்ற போகம் லக்கா, ஆகியோருக்கு தலா ரூ.8 லட்சம், மட்கம் கம்லு, லஷ்மன் என்ற மத்வி சன்னு ஆகியோருக்கு தலா ரூ.5 லட்சம், மேலும் 6 பேருக்கு தலா ரூ.2 லட்சம் பரிசுத்தொகையுடன் தேடப்பட்டு வந்தனர் ” என்றார்.

* தலைக்கு ரூ.15 லட்சம் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் கமாண்டர் பலி

ஜார்க்கண்டின் பலாமு மாவட்டத்தில் முகமதுகஞ்ச் மற்றும் ஹைதர்நகர் காவல்நியைல எல்லைக்கு இடையேயான சிதாச்சுவான் பகுதிக்கு அருகே மாவோயிஸ்ட்டுக்கள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து வீரர்கள் அங்கு விரைந்தனர். அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார்.

இது தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் கமாண்டர் துளசி பூனியன் என்று சந்தேகிக்கப்படுகின்றது. இவரது தலைக்கு போலீசார் ரூ.15லட்சம் சன்மானம் அறிவித்து இருந்தனர். என்கவுன்டரில் பலத்த காயமடைந்த நிலையில் கைது செய்யப்பட்ட மற்றொரு மாவோயிஸ்ட் நிதேஷ் யாதவ் தலைக்கும் ரூ.15லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.