Tuesday, June 25, 2024
Home » சென்னை விமான நிலையத்தை சுத்தப்படுத்துவதற்காக ரன்வே மெக்கானிக்கல் ஸ்வீப்பர் இயந்திரங்கள்: விமான நிலைய இயக்குனர் தொடங்கி வைத்தார்

சென்னை விமான நிலையத்தை சுத்தப்படுத்துவதற்காக ரன்வே மெக்கானிக்கல் ஸ்வீப்பர் இயந்திரங்கள்: விமான நிலைய இயக்குனர் தொடங்கி வைத்தார்

by Ranjith

சென்னை: சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் நிற்கும் பகுதி, ஓடுபாதை, டாக்ஸிவே போன்றவைகளை சுத்தப்படுத்தி பராமரிக்கும் பணியை, இதுவரை விமான நிலைய லோடர்கள் எனப்படும் தனியார் ஒப்பந்த ஊழியர்கள் செய்து வருகின்றனர். அதில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. மேலும் ஒப்பந்த ஊழியர்கள் அதிக அளவில் இந்த பணிக்கு அமர்த்தும் நிலையும் ஏற்பட்டது.
முக்கிய பிரமுகர்கள் சென்னை வரும்போது, விமான நிலையத்தில் 5 அடுக்கு, 7 அடுக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக ஒப்பந்த ஊழியர்கள் விமான நிலையம் வர கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.

அப்போது, பராமரிக்கும் பணிகள் தொய்வு அடையும். மேலும் மழைக் காலங்களிலும் இப்பணிகள் பாதிப்புக்குள்ளாகும். இந்நிலையில் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க, இந்திய விமான நிலைய ஆணையம், மேலைநாட்டு தொழில்நுட்பங்களுடன் அதிநவீன இயந்திரங்களை இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் பயன்படுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி ரன்வே மெக்கானிக்கல் ஸ்வீப்பர் எனப்படும் இந்த 2 இயந்திரங்கள் சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் முதல் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

இந்த இயந்திரங்கள் ரன்வே, டாக்ஸி வே, ஏப்ரான் பகுதிகளை மிகத் துல்லியமாக சுத்தப்படுத்துவதோடு, அதிக வேகமாகவும் செயல்படுவதாக கூறப்படுகிறது. மேலும், இந்த இயந்திரத்தின் அடிப்பாகத்தில் காந்த தகடுகளுடன் கூடிய இரும்பு ராடுகள் பொருத்தப்பட்டுள்ளதால், ரன்வே போன்ற பகுதிகளில் சிதறி கிடக்கும் இரும்புத் துகள்கள் போன்றவைகளையும் பாதுகாப்பாக எடுத்து அப்புறப்படுத்துகிறது. அதிக அழுத்தத்துடன் கூடிய, ஹை பிரஷர் தண்ணீர் குழாய்களும் பொருத்தப்பட்டுள்ளது.

அதனால் தரைகளைக் கூட தண்ணீரால் கழுவி சுத்தப்படுத்துகிறது. அதற்கான நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பிரஷ்களும் இந்த இயந்திரத்தில் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த இயந்திரங்கள் பயன்படுத்துவதற்கு சுலபமானது மட்டுமல்லாமல் பாதுகாப்பானது. இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் சென்னை விமான நிலையத்தில் இந்த அதிநவீன இயந்திரங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன. மற்ற விமான நிலையங்களிலும் இது படிப்படியாக செயல்பாட்டுக்கு வர இருப்பதாக அதிகாரிகள் கூறினர். இந்த புதிய அதிநவீன ஆர்எம்எஸ் எனப்படும் ரன்வே மெக்கானிக்கல் ஸ்வீப்பர் இயந்திரங்களை, சென்னை விமான நிலைய இயக்குனர் சி.வி.தீபக் தொடங்கி வைத்தார்.

You may also like

Leave a Comment

seven − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi