நாகர்கோவில்: நாகர்கோவில் ேமலராமன்புதூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோக்கள் வெளியிடுவார். கடந்த 3 நாட்களுக்கு முன், இவர் பெங்களூரு- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் நாகர்கோவில் வந்து கொண்டிருந்தார். அப்போது ஓடும் ரயிலில் படிக்கட்டில் தொங்கியபடி வீடியோ எடுத்து அதை ரீல்சாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ வைரலானதுடன் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. சமூக வலைதளங்களில் இதை பார்த்த பலரும் சம்பந்தப்பட்ட இளம்பெண் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதைதொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணையில் இறங்கினர். அவரது வீட்டை கண்டுபிடித்து தேடி சென்றனர். அவரை காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என கூறினர். இந்த நிலையில் நேற்று தனது சமூக வலைதள பக்கத்தில் அதே இளம்பெண் மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டு, நான் மிகப்பெரிய தவறு செய்து விட்டேன். ஓடும் ரயிலில் இது போன்று நடந்து கொண்டதற்காக மன்னிப்பு கோருகிறேன். நான் செய்த இந்த தவறை இனி யாரும் செய்யக்கூடாது.
படிக்கட்டில் நடனமாடிய போது தவறி கீழே விழுந்து இறந்திருந்தாலோ, கை கால் முறிந்து இருந்தாலோ எனது நிலை என்னவாகி இருக்கும் என்பதை இப்போது தான் யோசித்துப் பார்க்கிறேன் என்று கூறி இருக்கிறார். இந்நிலையில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் நடத்திய விசாரணையில் அந்த இளம் பெண் நாகர்கோவில் மேலராமன்புதூர் பகுதியை சேர்ந்த சகிலாபானு (30) என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து, எச்சரிக்கையுடன் ஜாமீனில் விடுவித்தனர்.