திருச்சி: ஓடும் பஸ்சில் டிரைவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். பஸ், டெலிபோன் கம்பத்தில் மோதி நின்றது. பயணிகள் தப்பினர். ஸ்ரீரங்கத்திலிருந்து ராம்ஜிநகர் அருகே புங்கனூருக்கு அரசு டவுன் பஸ் நேற்று காலை 7 மணிக்கு புறப்பட்டது. பஸ்சை திருச்சி மாவட்டம், மணப்பாறையை சேர்ந்த டிரைவர் கணபதி(56) ஓட்டினார். பஸ்சில் 10 பயணிகள் இருந்தனர்.
காலை 8.30 மணியளவில் கன்டோன்மென்ட் பகுதி பாரதியார் சாலையில் சென்றபோது டிரைவர் கணபதிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அவர் வலியால் துடிக்கவே பஸ் தாறுமாறாக சென்றது. பயணிகள் அச்சமடைந்து அலறினர். அப்பகுதியில் இருந்த தனியார் பள்ளி நுழைவாயில் அருகே டெலிபோன் கம்பம் மற்றும் அருகில் இருந்த ஒரு கடை மேற்கூரை மீது மோதி பஸ் நின்றது. அதிர்ஷ்டவசமாக 10 பயணிகளும் காயமின்றி தப்பினர்.
கன்டோன்மென்ட் போலீசார் வந்து டிரைவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், டிரைவர் கணபதி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.