ஒலிம்பிக்கில் ஓடி பதக்கம் வாங்குவதும் தேசிய மாநிலப் போட்டிகளில் விருது வெல்வதும்தான் விளையாட்டு என்று ஒரு பொதுச் சிந்தனை உருவாகி இருக்கிறது. அதனால் தங்கள் குழந்தைகளைப் பெரும்பாலான பெற்றோர்கள் விளையாட அனுப்புவதே இல்லை. பல மாணவர்களுக்கு எந்த விளையாட்டுமே தெரியாது. காலை எழுந்தவுடன் டியூஷன், பிறகு பள்ளி, மாலை வந்தவுடன் ஹோம் ஒர்க், சிறப்பு வகுப்புகள் என்று நாள் முழுவதும் படிப்பை மட்டுமே சுற்றி வரக்கூடிய மாணவர்களைப் பார்க்கிறோம். எண்பது சதவீத மாணவர்களின் ஒரு நாளைய சுழற்சி இப்படித்தான் இருக்கிறது. கிராமப்புறத்திலும் இப்படியான நிலைமை வந்துவிட்டது. பம்பரம் விளையாடுவது, பனங்காயில் சக்கரம் செய்து விளையாடுவது, பல்லாங்குழி ஆட்டம், சில்லு விளையாட்டு எல்லாம் காணாமல் போய்விட்டது.இதற்குக் காரணம் இருக்கிறது. பல கிராமப்புற மாணவர்கள் அருகில் நகரத்தில் இருக்கும் பள்ளிக்கு படிக்கச் செல்கிறார்கள். பள்ளி வேன் மூலம் வீட்டிற்கு வருவதற்கே மாலை இருட்டி விடுகிறது. அதற்குப் பிறகு கை கால் கழுவி விட்டு கொஞ்சம் ஸ்நாக்ஸ் சாப்பிட்டுவிட்டு மறுபடியும் டியூஷன் போய்விடுகிறார்கள். இல்லையென்றால் ஹோம் ஒர்க் எழுதத் தொடங்கிவிடுகிறார்கள். சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இல்லை என்றால் வீட்டில் பெற்றோர்களே தனியாக கோச்சிங் க்ளாஸ் ஏற்பாடு செய்கிறார்கள். அரிதாகச் சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பேட்மிண்டன், டென்னிஸ் என்று விளையாட்டில் சேர்த்து விளையாட வைக்கிறார்கள். ஆனால், அதில் கூட நோக்கம் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பெற்று பரிசுகள் வாங்க வேண்டும் என்பதாகத்தான் இருக்கிறது. இப்படி பரிசுக்காக விளையாடும் மாணவர்களுக்கு அது விளையாட்டாக இருக்காது. அது ஒரு எக்ஸ்ட்ரா கோர்ஸ். இதற்கு அவர்கள் விளையாடாமலே இருக்கலாம்.
ஏன் விளையாட வேண்டும்?
குழந்தைகளின் மன அழுத்தம் இன்றி படிப்பதற்கு விளையாட்டு அவசியம். சிறுவயதிலிருந்தே குழந்தைகள் இயல்பாக வளர விளையாட்டு மிகவும் அவசியம். விளையாட்டு என்பது வீட்டுப்பாடங்கள், பள்ளித் தேர்வுகள் எல்லாவற்றையும் கொஞ்ச நேரம் மறந்து விட்டு உடலில் வியர்வை சிந்தச் செய்வது விளையாட்டு. அது இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நாம் சொல்கிற விளையாட்டிற்கு விதிகள் அவசியமில்லை. விளையாட்டு ஜாலியாக இருக்க வேண்டும். செஸ் விளையாடுவது, ஆடு புலி ஆட்டம் விளையாடுவது, பெண்கள் தாயம் ஆடுவது ஆகிய விளையாட்டுகள் மூளைக்கு வேலை கொடுப்பவை. இந்த விளையாட்டுகள் மூலம் ஞாபக சக்தி அதிகரிக்கும், மூளை வழக்கத்தை விட சுறுசுறுப்பாக இயங்கும். மாணவர்கள் விளையாடும் போதுதான் புதிதாகப் பலச் செய்திகளை கற்றுக்கொள்கிறார்கள். விளையாடி முடித்தபின் மனசு தளர்ச்சியாக, லேசாக உற்சாகமாக இருக்கும். விளையாடாமல் படித்தால் ஒரு மணி நேரம் படிக்க வேண்டிய விஷயத்தை விளையாடிய பிறகு படித்தால் 30 நிமிடத்தில் படித்து முடித்துவிடலாம். சிரித்து விளையாடும்போது நண்பர்களுடனான உறவு வலுவடைகிறது. உங்களோடு சண்டை போட்ட சக மாணவர்கள் விளையாட்டின் போது நண்பர்களாக மாறிவிடும் அதிசயம் நிகழும். அது உங்களுக்குப் பிடிக்காத வகுப்பறையைப் பிடித்தமுள்ளதாக மாற்றும். மற்றவர்கள் மீது நம்பிக்கை உருவாகிறது. சக மனிதர்களை மதிப்புடன் நடத்துவது, விட்டுக் கொடுப்பது, அடுத்தவர்களின் வெற்றிக்காக உழைப்பது, தடைகளைக் கடந்து வெற்றிபெறுவது என்று பல நற்குணங்களை விளையாட்டு மூலமே கற்றுக்கொள்ள முடியும். மாலையில் அடிக்கும் வெயில் குழந்தைகளின் உடலில் பட வேண்டும். அது உடலை வலிமைப்படுத்த உதவும். மாணவர்களின் ஐம்புலன்களும் கூர்மை அடையும். உலகில் இருக்கும் புதிய நடைமுறைகளை அவர்கள் புரிந்து கொள்கிறார்கள். கற்பனைத் திறன் வளர்ச்சிக்கும் விளையாட்டுகளே கதவுகளைத் திறந்து விடுகின்றன. விளையாட்டின் மூலமே ஒரு மாணவர் இந்த உலகத்தை புரிந்து கொள்கிறார். என்ன செய்தால் என்ன கிடைக்கும்? எப்படிச் செய்தால் என்ன விளைவு உண்டாகும் என்று முன்கூட்டி தீர்மானிக்கும் அறிவை விளையாட்டு மூலம் பெற முடியும். விளையாட வைக்க வேண்டும் என்று சொன்னவுடன் உங்கள் குழந்தைகளைத் தனியாக விளையாட விடாதீர்கள். இன்றைய காலகட்டத்தில் பாதுகாப்பு அம்சம் முக்கியம். பெற்றோர்களும் குழந்தைகளுடன் சேர்ந்து விளையாட வேண்டும். இதனால் தங்கள் குழந்தைகளுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைக்கிறது. குழந்தைகளை விளையாட அனுமதித்தால் பெற்றோர்கள் சொல்வதைக் குழந்தைகள் கேட்பார்கள்.விளையாட்டு மேற்படிப்புக்கும் உதவுகிறது என்பது ஒரு நல்ல செய்தி. விளையாட்டில் மாநில அளவில் பதக்கங்கள் விருதுகள் வைத்திருப்பவர்களுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் உயர்கல்விக்கும் வேலைவாய்ப்புக்கும் இடம் கிடைக்கிறது. பணியாளர் தேர்வாணையமும் விளையாட்டு வீரர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குகிறது. அந்த வகையிலும் விளையாட்டு அவசியமாக இருக்கிறது.
ஆசிரியர் என்ன செய்ய வேண்டும்?
ஆசிரியர்கள் விளையாட்டுப் பாடவேளையில் மாணவர்களை முதலில் விளையாட விட வேண்டும். முடிந்தால் அவர்களோடு இணைந்து விளையாட வேண்டும். திறமையுள்ள மாணவர்களை அடையாளம் காண வேண்டும்.
அரசு என்ன செய்ய வேண்டும்?
அனைத்து வகைப் பள்ளிகளிலும் கண்டிப்பாக ஒரு விளையாட்டு
ஆசிரியரை நியமிக்க வேண்டும். குறைந்தபட்ச மாணவர்கள் இத்தனை பேர் இருந்தால்தான் ஒரு விளையாட்டு ஆசிரியர் நியமிக்கப்படுவார் என்ற விதிகளைத் தளர்த்த வேண்டும். கிராமப்புறங்களில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதினால் சில பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பற்றாக்குறை இருக்கிறது. ஆனால் அந்த குறைவான எண்ணிக்கையில் உள்ள மாணவர்களில் சிறந்த ஆட்டக்காரர்கள் இருப்பதை அடையாளம் காண அந்த பள்ளிக்கு ஒரு விளையாட்டு ஆசிரியர் அவசியம்.
சமூகம் என்ன செய்ய வேண்டும்?
விளையாட்டு வீரர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும். மாவட்ட அளவில் அல்லது மாநில அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிக்காக வெளியூரில் இருந்து மாணவ மாணவிகள் வரும்போது அவர்களுடைய பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாக இருக்கிறது . இதனாலேயே பல பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை வெளியூரில் நடைபெறும் போட்டிகளுக்கு அனுப்புவதில்லை. இது சமூகத்தின் மீதுள்ள அவநம்பிக்கை மட்டுமே. இதனால் கூட திறமையான விளையாட்டு வீரர்கள் வெளியில் தெரியாமல் போய்விடுகிறார்கள். எனவே ஒவ்வொருவருக்கும் சமூகப் பொறுப்பு உண்டு. விளையாட்டு வீரர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வது சமூகத்தின் கையில் தான் இருக்கிறது. விளையாட்டு நாட்டிற்கு மட்டும் வெற்றி கொண்டு வருவதில்லை. மகிழ்ச்சியை உருவாக்குவதன் மூலம் வீட்டிற்கும் வெற்றியை அழைத்து வருகிறது.
– இன்னும் படிப்போம்…
முனைவர் ஆதலையூர் சூரியகுமார் கல்வியாளர்