சிமூர்: மகாராஷ்டிராவின் சந்திராபூர் மாவட்டத்தில் உள்ள சிமூரில் நடந்த பாஜ தேர்தல் பிரசார பேரணியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது பேசிய பிரதமர் மோடி,”காங்கிரஸ் இடஒதுக்கீடுகளால் எரிச்சல் அடைகிறது. 1980களில் ராஜீவ் காந்தி கட்சியை வழிநடத்தியபோது, தலித்துக்கள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிவாசிகளுக்கான சிறப்பு உரிமைகள் குறித்து கேள்வி எழுப்பி ஒரு விளம்பரத்தை வெளியிட்டார்.
இந்த பழைய விளம்பரம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது. இது காங்கிரசின் இடஒதுக்கீடுக்கு எதிரான அணுகுமுறையை பிரதிபலிக்கிறது. உங்கள் ஒற்றுமையை உடைப்பது தான் காங்கிரஸ் கட்சியின் ஆபத்தான விளையாட்டு. ஒரு பழங்குடியின சமூகம் சாதிகளாக பிரிந்தால் அதன் அடையாளமும் வலிமையும் இழக்கப்படும். காங்கிரஸ் கட்சியின் இளவரசர் வெளிநாட்டில் இருந்தபோதே இது குறித்து அறிவித்துள்ளார். அதனால் தான் கூறுகிறேன். காங்கிரஸ் கட்சியின் இந்த சதிக்கு நாம் பலியாக கூடாது.
நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நாம் ஒற்றுமையாக இருந்தால் பாதுகாப்பாக இருப்போம். நீங்கள் ஒற்றுமையாக இருக்கவில்லை என்றால் உங்கள் இடஒதுக்கீட்டை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும். நாட்டை ஆள்வதற்கு பிறந்தோம் என்பது காங்கிரசின் அரச குடும்பத்தின் மனநிலை. சுதந்திரத்திற்கு பிறகு தலித்துக்கள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிவாசிகள் முன்னேறுவதற்கு காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காததற்கு இதுவே காரணமாகும்” என்றார்.