நன்றி குங்குமம் தோழி
இந்தியாவைப் பொறுத்தவரை கிரிக்கெட் அளவிற்கு எந்தவொரு விளையாட்டுக்கும் பெரிய அளவிலான வரவேற்புகள் இருந்ததில்லை என்று கூறலாம். கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் கிரிக்கெட் ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தாலும், ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி ஏற்கெனவே தங்கம் வென்றிருக்கிற போதும், கிரிக்கெட் அளவுக்கு ஹாக்கி உட்பட பல விளையாட்டுகள் இங்கு கவனிக்கப்படுவதில்லை.
இதற்கிடையில், வெளிநாடுகளில் மிகவும் பிரபலமான ரக்பி (Rugby) விளையாட்டு தற்போது இந்தியாவில் துளிர்விட ஆரம்பித்திருக்கிறது. அதற்கு அடையாளமாக சமீபத்தில் நடந்து முடிந்த மகளிருக்கான 18 வயதுக்கு உட்பட்டோர் ஆசிய ரக்பி போட்டியில் இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வென்று நாட்டுக்கே பெருமை சேர்த்திருக்கிறது. அந்த அணியில் இடம் பெற்று இருக்கும் அக்ஷயா, திவ்யா இரண்டு வீராங்கனைகளும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ரக்பி போட்டியின் தமிழக வெள்ளி மங்கை அக்ஷயா தன் ரக்பி பயணம் குறித்து விவரித்தார். “ஆவடி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கிறேன். 5 வருஷமா ரக்பி விளையாடிட்டு இருக்கேன். இந்தியாவுல நிறைய பேர் இந்த விளையாட்டு பற்றி கேள்விப்பட்டதில்லை. குறைவான மக்கள் தான் இந்த விளையாட்டினை விரும்பி பார்க்கிறார்கள். ரக்பி விளையாட்டு பற்றி தெரிந்தவங்க கூட அந்த பந்து தேங்காய் போல் இருக்கும்னு தான் சொல்வாங்க.
அவங்களுக்கு தெரிஞ்சது எல்லாமே அந்த பந்துக்காக சண்டை போடுவாங்க அவ்வளவுதான். கால்பந்து, கிரிக்கெட் அளவுக்கு ரக்பி இங்க பெரிய அளவில் பேசப்படவில்லை. ஆனால், இந்தியாவில் ரக்பி விளையாட்டு இருக்கு. அதை நாங்க விளையாடிக் கொண்டுதான் இருக்கிறோம். இந்த விளையாட்டிற்கான இந்திய ரக்பி கால்பந்து யூனியனும் இங்கிருக்கு. நான் திருவள்ளூர் மாவட்டத்திற்கு மூன்று வருஷமா விளையாடிக் கொண்டு இருக்கேன்” என்று கூறியவர், தனக்கு ரக்பி அறிமுகமானதை பற்றி பேசத் தொடங்கினார்.
“தமிழ்நாடு ரக்பி அசோசியேஷன் மூலமா ஸ்கூல்ல சின்னதா அந்த விளையாட்டினை கொண்டு வந்தாங்க. அப்போ அந்த விளையாட்டைப் பார்க்கும் போது புதுசா இருந்துச்சு. எதுவும் தெரியாது. ஆனா, அந்த விளையாட்டு பற்றி மற்றவர்கள் சொல்லும்போதும் விளக்கும்போதும் எனக்கு அந்த விளையாட்டு மேல் ஒரு ஈடுபாடு ஏற்பட்டது. ரக்பி விளையாட்டு கடினமா இருக்கும். உலகத்திலேயே ரொம்ப டேஞ்சரஸ் கேம்னு சொல்லுவாங்க. இது ஆக்ரோஷமான விளையாட்டும் கூட. சொல்லப்போனால் இந்த விளையாட்டு விளையாடும் போது எப்ப கை கால் உடையும்னு கூட சொல்ல முடியாது. அப்படி இருந்தும் எனக்கு இந்த விளையாட்டு ரொம்பவே பிடிச்சிருந்தது. நான் எங்க வீட்டில் இந்த விளையாட்டு பற்றி சொன்னதும், அவங்க எந்த மறுப்பும் சொல்லவில்லை. என் பெற்றோர் எனக்கு முழு ஆதரவு கொடுத்தாங்க” என்று கூறிவிட்டு ரக்பி பற்றி சுருக்கமாக விளக்க ஆரம்பித்தார்.
“ஒரு டீம் என்றால் அதில் ஏழு அல்லது 15 பேர் கொண்டு விளையாடுவாங்க. நான் இதில் ஏழு பேர் கொண்டு குழுவில் விளையாடுறேன். கால்பந்து ஆட்டத்தில் எப்படி கோல் போஸ்ட் இருக்குதோ, அது மாதிரி இங்க அந்த போஸ்ட் லைன் முழுவதுமே கோல் லைன் தானே. விளையாட்டோட ரூல்ஸ், பந்தை நேருக்கு நேரா பாஸ் பண்ணக்கூடாது. பந்தை அடித்து அதை முன்னாடி கொண்டு போக வேண்டும். அப்படி இல்லைனா ஒருத்தரிடம் கொடுத்து பாஸ் செய்து கொண்டு போகணும்.
அப்படி போகும்போது தடுப்பாட்டம் ஆடுறவங்க, பந்து யார் கிட்ட இருக்குதோ அவங்கள கீழ தள்ளி விடுவாங்க. எல்லாமே ஒரு செகண்ட் தான். அதேசமயம் விளையாட்டு ரொம்ப நியாயமா தான் இருக்கும்னு” சொல்லி முடிச்சவர் இந்திய அணியில் மற்ற வீராங்கனைகளோடு ஒருங்கிணையும் போது சந்திச்ச சின்னச் சின்ன சவால்களை பகிர்ந்துகொண்டார்.
“ரக்பி விளையாட்டுக்கு மற்ற மாநிலத்தில் இருந்து நிறைய பேர் வருவாங்க. ஆனா, தமிழ்நாட்டில் குறைந்த பேர்தான் இந்த விளையாட்டை விளையாட தேர்வு செய்றாங்க. இந்திய அணியில் நாங்க பங்கு பெற்று இருந்தாலும் அதில் வட இந்தியர்களின் ஆதிக்கம்தான் அதிகமா இருந்தது. எனக்கு கொஞ்சம் ஹிந்தி தெரியும். என்னுடன் வந்த மற்றொரு பெண்ணிற்கு இந்தி தெரியாது. ஆனா, அங்கே இருக்கிறவங்களுக்கு இங்கிலீஷ் தெரியாது, ஹிந்தி மட்டும் தான் பேசுவாங்க. எங்களுக்கு ஆங்கிலம் தெரியும் என்பதால், பயிற்சியாளர் சொல்வதை கவனிக்க முடிந்தது. ஆனா, கூட இருக்கிற மற்ற வீரர்களுடன் நாங்க தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள 20 நாளுக்கு மேலாச்சு.
ஒடிசாவில் 5 வாரம் எங்களுக்கு பயிற்சி கேம்ப் இருந்தது. அதில் ஒவ்வொரு வாரமும் ஒரு விளையாட்டு வீரரை வெளியேற்றுவாங்க. பயிற்சியும் கடினமா இருக்கும். அவங்க கொடுக்கும் அனைத்து பயிற்சியும் முடிக்கணும். பிடிக்கலைன்னா வீட்டுக்கு ேபான்னு சொல்லிடுவாங்க. இந்தியாவிலிருந்து நாங்க 27 பேர் போயிருந்தோம். அதில் தமிழ்நாட்டிலிருந்து மூணு பேர் பயிற்சிக்கு தேர்வானோம். அதில் ஒரு பெண் இரண்டாவது வாரத்தில் வெளியேற்றப்பட்டாள். நானும் அக்ஷயாவும்தான் ஒவ்வொரு வாரமும் கடந்து கடைசியா டீமில் சேர்ந்தோம். டீமில் சேர்ந்த பிறகு பயிற்சி இன்னும் கடுமையா இருந்தது. தென் ஆப்பிரிக்காவில் இருந்து பயிற்சியாளர்கள் வந்திருந்தாங்க. அவங்க திறமை அடிப்படையில் தான் டீமை தேர்வு செய்தாங்க” என்று கூறியவர் தாங்கள் ஆடிய விளையாட்டு போட்டியினைப் பற்றி குறிப்பிட்டார்.
“ஆசிய அணிகளில் இந்திய அணியையும் சேர்த்து மொத்தமா 5 டீம்தான் போட்டியில் பங்கு பெற்றது. நாங்க முதல் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிராக விளையாடினோம். அந்த டீம் கடந்த மூணு வருஷமா தங்கம் வென்ற டீம். அதில் இந்தியா அவங்க கூட ஒரு லீக்கில் கூட ஜெயிச்சது இல்ல. ஆனா, இந்த முறை முதல் மேட்சிலேயே அவங்கள நாங்க ஜெயிச்சோம். இரண்டாவது மேட்ச் சைனீஸ் தைபேயுடன் வெற்றி பெற்றோம். அடுத்தும் தாய்லாந்துடன் விளையாடி வெற்றி கண்டோம். இந்த மேட்ச் கொஞ்சம் கடினமாதான் இருந்தது.
இந்திய வரலாற்றிலேயே தொடர்ந்து ஹாட்ரிக் அடித்தது எங்க டீம்தான். நாங்க மூன்று மேட்சிலேயும் தொடர்ந்து ஜெயித்ததால, நேரடியா பைனல்சுக்கு தேர்வானோம். அதில் மறுபடியும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உடன் போட்டியிட்டோம். ஜெயிச்சிடுவோம் என்ற நம்பிக்கையில் விளையாடினோம்.
ஆனா, தோற்றுவிட்டோம். எங்க டிமிற்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது…” புன்னகையோடு கூறியவர், அங்கு அளிக்கப்படும் பயிற்சிகள் பற்றி விவரித்தார். “எந்தவொரு வாய்ப்பும் யாருக்கும் அவ்வளவு எளிதாக கிடைத்திடாது. என்னுடைய இலக்கே இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாட வேண்டும் என்பதுதான். 42 நாள் ரொம்ப கடினமா பயிற்சி செஞ்சுதான் செலக்ட் ஆனேன். பட்ட கஷ்டம் எல்லாத்துக்கும் சேர்த்து நாங்க ரொம்ப பெருமையா உணர்ந்த தருணம், ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிரான பைனல்ஸ்ல நம்ம தேசியக் கொடி புடிச்சுகிட்டு தேசிய கீதம் பாடினது. அப்போது அந்த வலி எல்லாமே காணாம போயிடுச்சு.
இந்திய மக்கள் தொகையில ஒரு விளையாட்டு வீரரா, நாட்டின் தேசிய கீதம் பாடும் போது ரொம்ப பெருமையா இருந்துச்சு. என்னுடைய கனவு ஒலிம்பிக்ஸ் மற்றும் காமன்வெல்த் போட்டியில் இந்தியா சார்பாக கலந்து கொள்ளணும்” என்று பெருங்கனவோடு கூறி முடித்தார்.
தொகுப்பு: மா.வினோத்குமார்