Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ரப்பர் பந்தை வைத்துக்கொண்டு சிக்சர் அடிக்கும் டுபாக்கூர்களை பார்த்து திமுக அஞ்சாது: ஐ.லியோனி அட்டாக்

பெரம்பூர்: ரப்பர் பந்தை வைத்துக்கொண்டு சிக்சர் அடிப்பவர்களை பார்த்து திமுக அஞ்சாது என்று திண்டுக்கல் ஐ.லியோனி பேசினார். சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் “என் உயிரினும் மேலான” கழக இளம் பேச்சாளர்களின் கருத்தியல் பேச்சரங்கம் நேற்று மாலை சென்னை ஓட்டேரியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலை வகித்தார். இதில் திமுக கொள்கை பரப்பு செயலாளரும் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவருமான திண்டுக்கல் ஐ.லியோனி பேசியதாவது;

பெண்கள், இளைஞர்களை மேடையில் அமர்த்தி அமைச்சரும் மற்றவர்களும் கீழே உட்கார்ந்திருப்பதுதான் திமுக கற்றுக் கொடுத்த மனிதநேயம். மேடையில் 4 பேரை அமரவைத்துவிட்டு இந்த முனையில் இருந்து அந்த முனைக்கு செல்வது, நின்று பேசுவது, பேப்பரை பார்த்து பேசுவது, பார்க்காமல் பேசுவது என 42 நிமிடம் எழுதிக் கொடுத்ததை எடுத்துப் பேசுவது திமுக அல்ல. கலைஞர், ஏன் கட்டுமரம் என தெரிவித்தார்கள் என்றால், கட்டுமரம் எப்படி திருப்பி போட்டாலும் மக்களை ஏற்றிக்கொண்டு செல்லும். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பணியே மகேசன் பணி என செய்யக்கூடிய இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம். நெஞ்சில் குடியிருப்பவர்கள் குடியிருந்துவிட்டு எப்போது வேண்டுமானாலும் காலி செய்துவிடுவார்கள். ஆனால், என் உயிரினும் மேலானவர்கள் என்றும் எப்போதும் உயிரோடு கலந்திருப்பார்கள்.

திமுகவை எதிர்த்து நிற்பவர்களை நெருப்போடு போர் தொடுக்க வந்த விட்டில் பூச்சி என கலைஞர் கூறுவார். அதேப்போன்று, திமுகவை வீழ்த்த நினைத்த விட்டில் பூச்சிகளெல்லாம், திமுக என்கிற ஜோதியில் ஐக்கியமாகி விட்டார்கள். திமுகவை தீய சக்தி என்று கூறியவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் இருக்கின்றனர். திமுகவின் அடுத்த தலைமுறையான உதயநிதி ஸ்டாலினின் வருகை சாதாரணமானதல்ல. ஐ.பி.எல்., சர்வதேச போட்டிகளிலும் உதயநிதி ஸ்டாலின் சிக்சர் அடித்து வருகிறார். உள்ளூரில் சின்னப் பையன்கள் லப்பர் பந்தில், சிக்சர் அடிப்பதை ஆரவாரத்துடன் பார்த்து மகிழ்பவர்களை பார்த்து எங்களுக்கு அச்சமில்லை. துணை முதலமைச்சர் களத்தில் இறங்கி செயல்படுகிறார். லப்பர் பந்தில் சிக்சர் அடிக்கும் டுபாக்கூர்களை பார்த்து நாங்கள் அச்சப்படமாட்டோம்.

மூட நம்பிக்கைக்கும் சாதிய ஒடுக்குமுறைக்கும் எதிரான பேச்சு மூலம் இந்தியா முழுவதும் பெயரெடுத்து இந்திய அரசியல் தலைவர்களில் ஒருவராக உதயநிதி இருக்கிறார். கருப்பு சிவப்பு கொடியை தோளில் போட்டுக் கொள்ளும்போதே கம்பீரமாக இருக்கும். திமுக, ரத்தத்தால் உருவாக்கப்பட்ட கொடியைப் பெற்றுள்ளது. மஞ்சள் பையில் கைகளில் வைத்து கொண்டுவந்து ஏற்றப்பட்ட கொடி அல்ல திமுக கொடி.

இவ்வாறு பேசினார். விழாவில், தாயகம் கவி எம்எல்ஏ, சென்னை மண்டல குழு தலைவர் சரிதா மகேஷ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக, ‘’இளம் பேச்சாளர்கள் அன்பும் அறனும் எங்கள் கண்கள்’’ என்ற தலைப்பில் மாறன், ‘’பெண்மையை போற்றுவோம்’’ என்ற தலைப்பில் பம்மல் தினேஷ் ஆகியோர் உரையாற்றினர்.