வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஆர்டிஓவாக சுபலட்சுமி பணியாற்றி வருகிறார். கடந்த பிப்ரவரி 22ம் தேதி ஆர்டிஓ அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு இருந்த ஆர்டிஓ சுபலட்சுமியிடம், ஒரு கடிதத்துடன் 100 ரூபாய் நோட்டு கட்டை ஒருவர் கொடுத்து உள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சுபலட்சுமி மற்றும் அங்கிருந்த அதிகாரிகள் அந்த நபரை பிடித்து, குடியாத்தம் டவுன் போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், அந்த நபர் குடியாத்தம் அருகே சேத்துவண்டை கிராமத்தைச் சேர்ந்தமோகன்(40) என்பதும், வேலூரில் உள்ள தனியார் கல்குவாரி ஒன்றில் மேலாளராக பணிபுரிவதும், உறவினருக்கு சொந்தமான சேத்துவண்டையில் உள்ள விவசாய நிலத்தை சமன் செய்து அதிலிருந்து கிராவல் மண் எடுப்பதற்காக அனுமதி கேட்டு ஆர்டிஓவுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதும் தெரியவந்தது. இந்த வழக்கு வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசுக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து, விஜிலென்ஸ் போலீசார், கல்குவாரி மேலாளர் மோகன் மீது கடந்த 7ம் தேதி வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரது வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, கணிம மற்றும் சுரங்கத்துறையில் கிராவல் மண் எடுப்பதற்கான போலி ஆவணங்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மோகன் வீட்டில் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வைத்திருந்த பணம் மற்றும் மண் எடுப்பதற்காக அரசு முத்திரையுடன் கூடிய போலி ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து விஜிலென்ஸ் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.