புதுடெல்லி: ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தமிழ்நாட்டில் அனுமதி வழங்க முடியாது என தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்துவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மேல்முறையீட்டு மனுக்களையும் உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் 12ம் தேதி தள்ளுபடி செய்தது. மேலும் இந்த விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவையும் உறுதி செய்திருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட விவகாரத்தில் தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் சபரீஸ் சுப்ரமணியன் உச்ச நீதிமன்றத்தில் ஒரு புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், ‘‘தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்துவதற்கு அவர்களது தரப்பில் கேட்கப்படும் அனைத்து இடங்களும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். மேலும் அவர்கள் குறிப்பிட்டு கேட்கும் இடங்களில் மசூதி, கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளவையாக இருக்கிறது. இதுபோன்ற சூழலில் அனுமதி வழங்கினால் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படும். அதனால் தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்க முடியாது. இவை அனைத்தையும் அடிப்படையாக கொண்டு இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் ஒரு தடை உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த மனுவானது உச்ச நீதிமன்றத்தில் அடுத்த சில தினங்களில் விசாரணைக்கு வரவுள்ளது.