புதுடெல்லி: ஆர்எஸ்எஸ் ஒரு போதும் அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதில்லை என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. அரசியலமைப்பின் முகவுரையில் உள்ள சோஷியலிஸ்ட் மற்றும் மத சார்பற்ற என்ற வார்த்தைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் அழைப்பு விடுத்து இருந்தது. இந்த இரண்டு வார்த்தைகளும் அம்பேத்கர் வரைவு செய்த அரசியமைப்பின் ஒரு பகுதியாக இல்லை என்றும் எமர்ஜென்சியின்போது சேர்க்கப்பட்டதாகவும் ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே தெரிவித்தார்.
இந்நிலையில் ஆர்எஸ்எஸ் அழைப்பை எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‘‘ஆர்எஸ்எஸ் இந்திய அரசியலமைப்பை ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை. அது 1949ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதியில் அம்பேத்கர், நேரு மற்றும் அதன் வடிவமைப்பில் ஈடுபட்ட மற்றவர்களை தாக்கி வருகின்றது. ஆர்எஸ்எஸ்-ன் வார்த்தையில் அரசியலமைப்பு மனுஸ்மிருதியால் ஈர்க்கப்படவில்லை. ஆர்எஸ்எஸ்-பாஜ மீண்டும் மீண்டும் புதிய அரசியலமைப்புக்ான அழைப்பை விடுத்துள்ளன.
இது 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது பிரதமர் மோடியின் பிரசார முழக்கம். இந்திய மக்கள் இதனை முழுவதுமாக நிராகரித்தனர். ஆனால் அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மாற்றுவதற்கான கோரிக்கைகள் ஆர்எஸ்எஸ் சுற்றுச்சூழல் அமைப்பால் தொடர்ந்து முன்வைக்கப்படுகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார். இதேபோல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பதிவில், ஆஸ்எஸ்எஸ்-பாஜவின் கொள்கையானது இந்திய அரசியலமைப்புக்கு நேர் எதிரானது. ஆர் எஸ்எஸ் பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே, சோஷியலிஸ்ட் மற்றும் மதசார்பற்ற என்ற வார்த்தைகளை முகவுரையில் இருந்து நீக்க வேண்டும் என்று வௌிப்படையாக அழைப்பு விடுத்துள்ளார். இது வெறும் பரிந்துரை அல்ல. இது நமது அரசியலமைப்பின் ஆன்மா மீது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதலாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.