திருச்சி: தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியவர்கள் இணைந்து தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம் துவக்கி உள்ளனர். இந்த இயக்கத்தை சேர்ந்த ஒருங்கிணைப்பாளர்கள் வெற்றி குமரன், தனசேகரன், புகழேந்தி, பிரபு, தியாகராஜன் ஆகியோர் கூட்டாக இன்று திருச்சியில் அளித்த பேட்டி: திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நாளை மாலை 4 மணிக்கு இலங்கையில் கொல்லப்பட்டு உயிர் நீத்த தமிழ் சொந்தங்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் மாவீரர் நாள் அனுசரிக்கப்படுகிறது. இதில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு பங்கேற்கின்றனர்.
சீமான் செயல்பாடுகளில் திருப்தி இல்லாததால் 50க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் கட்சியை விட்டு வெளியேறி தற்போது தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கமாக உருவெடுத்துள்ளனர். இந்த இயக்கத்தின் நோக்கம் தமிழ் தேசியம் ஆகும்.நாம் தமிழர் கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் தமிழ் தேசியத்தின் சித்தாந்தங்களை சீமான் பின்பற்றினார். இன்று ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை பின்பற்றக்கூடிய செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார். இது தமிழகத்தில் மட்டுமல்ல வெளிநாடுகளில் வாழக்கூடிய தமிழர்களுக்கும், நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.