Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad Cement
search-icon-img
Advertisement

ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகம் உள்பட இந்தியாவில் 3 தாக்குதல் நடத்திய லஷ்கர் தீவிரவாதி சுட்டுக் கொலை: பாகிஸ்தானில் பரபரப்பு

லாகூர்: பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் மட்லி நகரில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் முக்கிய தளபதியான அபு சைபுல்லா காலித் என்று அழைக்கப்படும் ரசாவுல்லா நிஜாமானி காலித் வசித்து வந்தான். இந்திய புலனாய்வு அமைப்புகளால் தேடப்பட்டு வந்த இவன், தனது வீட்டை விட்டு வெளியேறியபோது, பால்கரா சவுக் பகுதியில் மூன்று மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டான். கடந்த 2006ம் ஆண்டு நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத் தாக்குதல், 2005ம் ஆண்டு பெங்களூரு இந்திய அறிவியல் கழக தாக்குதல் மற்றும் 2001ம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் சி.ஆர்.பி.எப். முகாம் மீதான தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டவன் ஆவான். பாகிஸ்தான் அரசின் பாதுகாப்பில் இருந்த போதிலும், மர்ம நபர்களின் துப்பாக்கிச் சூட்டில் சைபுல்லா காலித் கொல்லப்பட்டான்.

காலித்தின் இறுதிச் சடங்கு பிரார்த்தனைகள் ஞாயிற்றுக்கிழமை சிந்து மாகாணத்தின் பாடின் நகரில் நடைபெற்றன. இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் கொல்லப்பட்ட மற்ற பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்குகளைப் போலவே, லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளும் இந்த விழாவில் கலந்து கொண்டனர். காலித்தின் உடல் பாகிஸ்தான் தேசிய கொடியால் மூடப்பட்டிருந்தது, பயங்கரவாதிகள் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர். இறுதிச் சடங்கின் படங்களில் துப்பாக்கிகளை ஏந்திய நபர்களும் காணப்பட்டனர். லஷ்கர்-இ-தொய்பாவின் நேபாள பிரிவை 2000ம் ஆண்டு முதல் நிர்வகித்து வந்த சைபுல்லா காலித், நேபாளத்தை சேர்ந்த நக்மா பானுவை திருமணம் செய்து அங்கேயே வசித்து வந்தான்.

அங்கிருந்து இந்தியாவில் தீவிரவாதிகளை நேபாளம் வழியாக ஊடுருவச் செய்தான். இதனை இந்திய உளவு அமைப்புகள் கண்டறிந்ததை உணர்ந்த அவன், மீண்டும் பாகிஸ்தான் திரும்பினான். தொடர்ந்து லஷ்கர் மற்றும் ஜமாத்-உத்-தவா அமைப்புகளின் முக்கியத் தலைவர்களுடன் இணைந்து பணியாற்றினான். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு பாகிஸ்தானில் இருக்கும் தீவிரவாதத் தலைவர்களை வெளியில் நடமாட வேண்டாம் என ஐஎஸ்ஐ அமைப்புகள் எச்சரித்திருந்த போதிலும், சைபுல்லா காலித் இந்த அறிவுறுத்தலை பின்பற்றவில்லை என்று கூறப்படுகிறது.

* சைபுல்லா காலித் யார்?

ரசாவுல்லா, வினோதே குமார், முகமது சலீம் உள்ளிட்ட பல பெயர்களில் செயல்பட்ட சைபுல்லா காலித், இந்தியாவை குறிவைத்து நீண்ட காலமாக பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தான். நேபாளத்தில் இருந்து லஷ்கர் நடவடிக்கைகளை வழிநடத்தினான். அங்கிருந்து ஆட்சேர்ப்பு, நிதி, தளவாடங்கள் மற்றும் இந்திய-நேபாள எல்லையில் உள்ள தீவிரவாதிகளின் நடமாட்டத்தை மேற்பார்வையிட்டான். பயங்கரவாத அமைப்பின் ஏவுதளத் தளபதிகள் என்று அழைக்கப்படும் அசாம் சீமா அல்லது பாபாஜி மற்றும் குழுவின் தலைமை கணக்காளர் யாகூப் ஆகியோருடன் அவன் நெருக்கமாகப் பணியாற்றினான்.