அவனியாபுரம்: ஆர்எஸ்எஸ்சின் அஜண்டாவான ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என திருமாவளவன் தெரிவித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி நேற்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி: திமுக கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. அதற்கான தேவைகளும் இல்லை. அரசியல் களத்தில் அனைவரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டும். நடிகர் விஜய்க்கும் இந்த சவால்கள் உண்டு. மொழிக்கொள்கை தொடர்பாக ஒன்றிய அரசு தவறான தகவல் அணுகுமுறையை கொண்டிருக்கிறது. இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் மாநிலங்களில் இந்தி மட்டும் தான் படிக்கிறார்கள். பிற மொழியை படிக்கவில்லை.
வடஇந்திய மாநிலத்தில் இருந்து வரும் அமைச்சர்கள் ஆங்கிலத்தில் பேசுவது இல்லை. ஒரு மொழிக்கொள்கையாக இந்தி பேசுபவர்கள் அதை கொள்கையாக வைத்துக் கொள்ளும்போது, தமிழ்நாடு மற்றும் தென் மாநிலங்களில் 3 மொழிகளில் கற்றுக் கொண்டு நிபுணர்களாக வர வேண்டும் எனக் கூறுவது ஏற்புடையது அல்ல. ஆர்எஸ்எஸ்சின் அஜண்டா என்பது ஒரே மொழி, ஒரே கலாச்சாரம். அவற்றை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒன்றிய அரசின் ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே கொள்கை என்பதை நாங்கள் எதிர்க்கிறோம். இவ்வாறு கூறினார்.
* ‘சாதிய வன்முறை தடுக்க சிறப்பு நுண்ணறிவு பிரிவு’
திருமாவளவன் கூறுகையில், ‘‘தென்மாவட்டத்தில் சாதிய வன்முறைகள், குற்றச்செயல்களை முன்கூட்டியே கண்டறிந்து அவற்றை தடுப்பதற்கு ஒரு சிறப்பு நுண்ணறிவு பிரிவு தேவை என நீண்ட காலமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தி வருகிறது. சாதி, மதம் அடிப்படையில் வன்முறைகள் நடவாமல் முன்கூட்டியே அவற்றை கண்டறிந்து தடுப்பதற்கு கட்டாயமாக புலனாய்வு அமைப்பை ஏற்படுத்த வேண்டும். இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் இதுகுறித்து ஒரு அறிவிப்பை முதல்வர் வெளியிட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறோம்’’ என்றார்.