தொண்டாமுத்தூர்: பேரூரில் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் அதிமுக மாஜி அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பங்கேற்றது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் நேற்று முன்தினம் டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்தார். பின்னர் கார் மூலம் குரும்பபாளையம், பாலத்துறை வழியாக சுண்டக்காமுத்தூரில் உள்ள நாச்சிகோனார் தோட்டத்துக்கு சென்றார். அங்கு அவர் முக்கிய பிரமுகர்களை சந்தித்தார். இரவு அங்கு தங்கிய அவர் நேற்று காலை கோவை அருகே பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ் கல்லூரி வளாகத்தில் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டார். அவருக்கு பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் பூரண கும்ப மரியாதை மற்றும் ஏலக்காய் மாலை அணிவித்து வரவேற்றார்.
பின்னர் முத்தமிழ் அரங்கத்தில் நடந்த சிவ வேள்வி பூஜையில் மோகன் பகவத் கலந்து கொண்டார். இதில் ஆதீனங்கள், பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை மற்றும் நிர்வாகிகள், ஆர்எஸ்எஸ் மாநில பொறுப்பாளர் செந்தில்குமார், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்றது பரபரப்பை ஏற்படுத்தியது. அவருடன் அவரது சகோதரர் அன்பரசனும் பங்கேற்றார். மோகன் பகவத்துக்கு எஸ்.பி. வேலுமணியும், அன்பரசனும் வெள்ளி வேல் மற்றும் வெள்ளி முருகன் சிலையை பரிசளித்தனர். விழா முடிந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தர்ப்பண மண்டபத்தை மோகன் பகவத் பார்வையிட்டார். பின்னர் கார் மூலம் கோவை விமான நிலையத்துக்கு சென்று அங்கிருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
ஆங்கிலத்தில் பேசிய மோகன் பகவத்
உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த 2 நாட்களுக்கு முன்பு பேசும்போது, ஆங்கிலத்தில் பேசுபவர்கள் வெட்கப்பட வேண்டும் என்று கூறி இருந்தார். இந்த நிலையில் நேற்று ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் பேசிய மோகன் பகவத் ஆங்கிலத்திலேயே நீண்ட நேரம் பேசினார். இது விழாவில் பங்கேற்றவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
காவி மயமாகும் அதிமுக: தொண்டர்கள் அதிர்ச்சி
மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நேற்று முன்தினம் நடந்தது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்றனர். அவர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்ட வீடியோ ஒன்றில் அண்ணா, பெரியார் அவமரியாதை செய்யப்பட்டனர். இது அதிமுக நிர்வாகிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதற்கு அதிமுக சார்பில் வலிமையான கண்டனத்தை தெரிவிக்காமல், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அந்த வீடியோவை தவிர்த்து இருக்கலாம் என கூறி அண்ணா மீது குற்றச்சாட்டை முன்வைத்து உள்ளார். இது அதிமுக தொண்டர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘‘பாஜவுடன் இனி உறவு இல்லை என்று கூறியவர் ஜெயலலிதா. அதிமுக நிரந்தர பொதுச்செயலாளர் என ஜெயலலிதாவை கூறிவந்த முன்னாள் அமைச்சர்கள் பாஜவுடன் கூட்டணி வைத்து, அதிமுகவை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகிறார்கள். அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என பெயருடைய நமது கட்சி நிர்வாகிகள் முன்னிலையிலேயே அண்ணா அவமரியாதை செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே அண்ணா, ஜெயலலிதா மீது அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்தார். இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. கூட்டணி என்ற பெயரில் பாஜ விமர்சனத்துக்கு அடிபணிந்து, அவர்கள் சொல்வதற்கு தலையாட்டி பொம்மைபோல் செயல்பட்டு வருகின்றனர். இதே தொடர்ந்தால் எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுக அழிக்கப்பட்டு விடும். இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் நேற்று கோவையில் நடந்த ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு வேல் பரிசளித்திருப்பது அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போகிற போக்கை பார்த்தால் ‘அதிமுக முழுமையாக பாஜ மயமாகிவிடும்போல தெரிகிறது’ என்று தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
கொள்கை வேறு, கூட்டணி வேறு, நாங்கள் விட்டுத்தர மாட்டோம்: முட்டுக்கொடுக்கும் எஸ்.பி வேலுமணி
கோவை விமான நிலையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது: ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை கொங்கு மண்டலத்திற்கும், தமிழகத்துக்கும் பெருமை சேர்க்கக்கூடிய நூற்றாண்டு நிகழ்ச்சி. எங்களுக்கு மருதாசல அடிகளார் அழைப்பு விடுத்தார். ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு எங்களை அழைக்க மாட்டார்கள். நாங்கள் போகமாட்டோம். அது தனிப்பட்ட நிகழ்ச்சி. இந்த பேரூர் ஆதீனத்தின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிக்கு எங்களை அழைத்திருந்தார்கள். அழைப்பை ஏற்று சென்றோம். இதற்கும், ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கும் சம்பந்தம் இல்லை. அடிகளாரின் நிகழ்ச்சிக்கு மோகன் பகவத் சிறப்பு அழைப்பாளராக வந்தார். நான் மட்டுமின்றி முக்கியமானவர்கள் எல்லோரும் சென்றோம். எனது தொகுதிக்கு உட்பட்ட பகுதி என்ற அடிப்படையில்தான் மோகன் பகவத்துக்கு வேல், முருகன் சிலை ஆகியவற்றை கொடுத்தோம்.
ஒரு மகான் நிகழ்ச்சிக்கு போனதை திரித்து வெளியிட்டு இருக்கிறார்கள். இது மனசாட்சி இல்லாத செயல். முருக பக்தர் மாநாட்டிற்கு முன்னாள் அமைச்சர்கள் சென்றார்கள். அங்கு அண்ணா, பெரியாரை பற்றி பேசுவார்கள் என்பது அவர்களுக்கு தெரியாது. பக்தர்கள் மாநாடு என்பது அரசியலுக்கு அப்பாற்பட்ட மாநாடு. அதில் கலந்து கொண்டது தவறில்லை. அண்ணாவை பற்றி பாஜ விமர்சனம் செய்ததாலேயே துணிச்சலுடன் எடப்பாடி பழனிசாமி என்ன முடிவு எடுத்தார் என்பது தெரியும். எங்களது தலைவர்களை பற்றி பேசினால் பொறுமையாக இருக்க மாட்டோம். கூட்டணி வேறு, கொள்கை வேறு. எடப்பாடி பழனிசாமி எப்போதும் கொள்கையை விட்டுக்கொடுக்க மாட்டார். நாங்கள் தேர்தலுக்காக பல கட்சியுடன் கூட்டணி வைப்போம். கொள்கையிலிருந்து விட்டுக்கொடுத்தது கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.