புதுடெல்லி: தபால் வழியாக ரூ.2,000 நோட்டுகளை ரிசர்வ் வங்கி அலுவலகங்களுக்கு அனுப்பி நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் தங்கள் கைவசம் உள்ள ரூ.2,000 நோட்டுகளை மாற்றிக் கொள்ளவும், தங்களது வங்கி கணக்கில் பற்று வைத்துக் கொள்ளவும் கடந்த அக்டோபர் 7ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. அதன் பின்னர் ரிசர்வ் வங்கியின் 19 கிளை அலுவலகங்களில் ரூ.2,000 நோட்டுகளை மாற்றிக் கொள்ளவோ அல்லது தங்களுடைய வங்கி சேமிப்புக் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளவோ ரிசர்வ் வங்கி அனுமதி அளித்தது.
இதற்கு எவ்வித கால அவகாசமும் விதிக்கப்படவில்லை. இந்நிலையில் ரிசர்வ் வங்கி கிளை அலுவலகங்களில் ரூ.2,000 நோட்டுகளை மாற்ற மக்கள் கூடுவதைத் தவிர்க்கும் பொருட்டு, தபால் வழியாக ரிசர்வ் வங்கி அலுவலகங்களுக்கு அனுப்பி, உரிய தொகையை தங்களின் வங்கி சேமிப்புக் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.