புதுச்சேரி: புதுவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில்ரூ.170 கோடி முறைகேடு தொடர்பாக 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று மாஜி முதல்வர் நாராயணசாமி தெரிவித்து உள்ளார்.
புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கள்ளச்சாராயம் விவகாரத்தில் கலால் துறை துணை ஆணையர் சுதாகர், மற்றும் நிதி செயலர் ராஜிவ் மாற்றப்படவில்லை. இவர்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மூன்று பேர் கொண்ட குழுவில் இருந்தனர். இந்த குழுவில் மூன்றாவது செயலராக அருண் இருந்தார். ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் அமைப்பதற்குரூ.170 கோடியே 11 லட்சம் டெண்டர் விடப்பட்டது. அதில் ஒன்றிய அரசு ரயில் டெல் மற்றும் அலைஸ் என்ற நிறுவனம் டெண்டர் கோரி இருந்தனர்.
இதில் குழுவில் இருந்த நிதி செயலர் ராஜூவ் மற்றும் துணை ஆணையர் சுதாகர் அலைஸ் நிறுவனத்துக்கு ஆதரவாக ஒப்பந்த விதியை வகுத்தனர். இதில் முறைகேடு நடப்பதாக குழுவின் மற்றொரு உறுப்பினர் அருண் தலைமை செயலருக்கு கடிதம் அனுப்பினார். முதல்வர் உத்தரவு இல்லாமல் இதனை செய்திருக்க மாட்டார்கள். இந்த தகவலை தலைமை செயலர் மத்திய உள்துறைக்கு புகார் அனுப்பியதையடுத்து இவர்கள் இருவரும் முக்கிய துறைகள் இல்லாத துறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இது ஊழல் ஆட்சி என்பதற்கு இதுவே ஒரு சான்று. இவ்வாறு அவர் கூறினார்.
* மோடி ஆட்சி மர்மமான ஆட்சி
நாராயணசாமி கூறுகையில், ‘சரித்திரத்தை மாற்றி எழுத மோடி, அமித்ஷா பார்க்கிறார்கள். செங்கோல் என்பது மன்னர் பதவியில் இருந்து இறங்கும் போது, அவரின் வாரிசுக்கு கொடுப்பது. இப்போது ஆட்சி மாற்றம் நடைபெற்று உள்ளதா? மோடி ஆட்சி ஒரு மர்மமான ஆட்சிதான்’ என்றார்.