அமராவதி: ஊழலை ஒழிக்க மீண்டும் பணமதிப்பு நீக்க நடவடிக்கையை அறிவிக்க வேண்டும் என சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்துள்ளார். ஆந்திர மாநிலம் கடப்பாவில் நடந்த தெலுங்கு தேச கட்சியின் மாநாட்டில் பேசிய முதல்வர் சந்திரபாபு நாயுடு; 2024 தேர்தலில் கட்சியின் வெற்றி அசாதாரணமானது. மாநிலம் முழுவதும் 93 சதவீத ஸ்ட்ரைக் ரேட்டுடன் மிக பிரம்மாண்டமான வெற்றியைப் கூட்டணி கட்சிகள் பெற்றோம். கட்சி இவ்வளவு வெற்றியைப் பெறுவதற்கு மஞ்சள் வீரர்கள்தான் காரணம்.
நான் ஜனசேனா மற்றும் பாஜகவுடன் கூட்டணி அமைத்தேன் எதையும் எதிர்பார்க்காமல் கட்சிக் கொடியை ஏந்திய தொண்டர்களால் மட்டுமே இந்த வெற்றி சாத்தியமானது. நம் கட்சியின் பணி முடிந்துவிட்டது என்று சொன்னவர்கள் தான் காணமல் போனார்கள். 43 ஆண்டுகால அரசியலில் நாட்டில் வேறு எந்தக் கட்சியும் சந்திக்காத நெருக்கடிகளை நாம் சந்தித்துள்ளோம். ஆனால் நீங்கள் கொடியைத் தாழ்த்தாமல் போராடியதற்காக நான் உங்களைப் பாராட்டுகிறேன் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர்; நாட்டில் ஊழலை ஒழிக்க மீண்டும் பணமதிப்பு நீக்க நடவடிக்கையை அறிவிக்க வேண்டும். ரூ.2,000 நோட்டுகளைத் திரும்பப்பெற்றதுபோல் ரூ.500 நோட்டுகளைத் திரும்பப்பெற வேண்டும். டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை வந்த பின்னர், பெரிய மதிப்பிலான ரூ.500, ரூ. 1,000, ரூ.2,000 மதிப்பிலான நோட்டுகள் தேவையற்றது எனவும், அப்போதுதான் ஊழலை ஒழிக்க முடியும் எனவும் கூறியுள்ளார்.