லண்டன்: பெரும்வெற்றித் தொடர்களில் முக்கியமான போட்டியான விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் போட்டி இன்று கோலாகலமாக தொடங்குகிறது. விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் போட்டியின் 138வது தொடர் இன்று தொடங்குகிறது. ஆண்கள், ெபண்கள் ஒற்றையர் பிரிவில் தலா 128 வீரர்கள், வீராங்கனைகள், இரட்டையர் பிரிவில் தலா 64 இணைகள் பங்கேற்கின்றனர். இவை தவிர, கலப்பு இரட்டையர், சக்கர நாற்காலி பிரிவு, இளையோர் பிரிவு, முன்னாள் நட்சத்திரங்கள் என பல்வேறு பிரிவுகளில் ஆண்கள், பெண்கள் இரு வகையான போட்டிகள் நடைபெற உள்ளன. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் ஒன் வீரரான ஜானிக் சின்னர் (இத்தாலி), நடப்பு சாம்பியன் கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), 7 முறை சாம்பியன் நோவக் ஜோகோவிச் (செர்பியா), ஸ்வெரவ் அலெக்சாண்டர் (ஜெர்மனி), டானில் மெத்வதேவ் (ரஷ்யா) உட்பட முன்னணி வீரர்கள் சாம்பியன் கனவில் களமிறங்க உள்ளனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனை அரீனா சபலென்கா (பெலாரஸ்), நடப்பு சாம்பியன் பார்போரா கிரெஜ்சிகோவா (செக் குடியரசு), முன்னாள் சாம்பியன்கள் மார்கெடா வொண்டர்சோவா, பெட்ரா குவிதோவா (செக் குடியரசு), எலனா ரைபாகினா (கஜகஸ்தான்), முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனைகள் இகா ஸ்வியாடெக் (போலந்து), நவோமி ஒசாகா (ஜப்பான்), கரோலினா பிளிஸ்கோவா (செக் குடியரசு) ஆகியோரும் சாம்பியன் ஆசையில் ஆட உள்ளனர். தங்கள் முதல் ஆட்டத்தில் சபலென்கா, தகுதிச் சுற்று மூலம் முன்னேறிய கார்சன் பிரன்ஸ்டின் (கனடா) உடனும், அலெக்சாண்டரா ஏலா (பிலிபைன்ஸ்) உடன் நடப்பு சாம்பியன் பார்போராவும் மோத இருக்கின்றனர்.இன்று தொடங்கும் போட்டியின் பெண்கள் இறுதி ஆட்டம் ஜூலை 12ம் தேதியும், ஆண்கள் இறுதி ஆட்டம் ஜூலை 13ம் தேதியும் நடைபெறும்.இந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான கார்லோஸ் வெற்றி பெற்றால் ஹாட்ரிக் சாம்பியன்கள் பட்டியலில் இணைவார். ஜோகோவிச் வென்றால் 8 பட்டம் வென்ற ரோஜரின் சாதனையை சமன் செய்வார்.