சென்னை:சென்னை பெருநகர காவல் எல்லையில் ஆன்லைன் மூலம் பொதுமக்களிடம் பல்வேறு வகையில் சைபர் குற்றவாளிகள் பணம் பறித்து வருகின்றனர். இதுபோன்ற ஆன்லைன் குற்றங்களை தடுக்க போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி மத்திய குற்றப்பிரிவில் சைபர் குற்றப்பிரிவு மற்றும் 4 மண்டலங்களில் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்கள் இயங்கி வருகிறது. மேலும், 12 காவல் மாவட்டங்களில் சைபர் குற்ற குழுக்கள் தேசிய சைபர் குற்றப்புகார் போர்ட்டலில் நிதி சைபர் குற்றங்களை உடனடியாக பதிவு செய்தல், மோசடி வங்கி கணக்குகளை உடனடியாக முடக்குதல், நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முடக்கப்பட்ட தொகையை திரும்ப பெறுதல் மற்றும் சைபர் குற்ற வழக்குகளில் குற்றம் சட்டப்பட்டவர்களை கைது செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அந்த வகையில் ஆன்லைன் வர்த்தக மோசடி, டிஜிட்டல் கைது மோசடி, ஆன்லைன் பகுதி நேரம் வேலை மோசடி, கிரிப்டோகரன்சி மாசடி, வாட்ஸ் அப் ஹேக்கிங் மோசடிகள் தற்போது அதிகளவில் நடந்த வருகிறது.
அதன்படி சென்னை பெருநகர காவல் எல்லையில் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் மே 31ம் தேதி வரையிலான காலத்தில் பல்வேறு ஆன்லைன் மோசடிகளில் பணத்தை இழந்ததாக 4,357 புகார்கள் வந்துள்ளது. அந்த புகார்களின் படி மொத்தம் ரூ.218.45 கோடி பணத்தை இழந்துள்ளனர். சென்னை சைபர் க்ரைம் போலீசார் எடுத்த முயற்சியால் புகார் அளித்து பணத்தை இழந்தவர்களுக்கு கடந்த 5 மாதத்தில் ரூ.10.45 கோடி திரும்ப பெற்று தரப்பட்டுள்ளது. சைபர் குற்றங்களில் ஈடுபட்டதாக கடந்த 5 மாதங்களில் 17 வெளிமாநிலத்தவர் உட்பட மொத்தம் 59 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை பரிவர்த்தனை செய்யாதப்படி ரூ.48 கோடி பணம் முடக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டு 2024 ஜனவரி 1 முதல் மே 31ம் தேதி வரையிலான காலத்தில் 3,888 பேரிடம் சைபர் குற்றவாளிகள் ரூ.182 கோடி பணம் பறித்துள்ளனர். எனவே ஆன்லைன் மோசடி நபர்களிடம் பணத்தை இழக்கும் நபர்கள் ‘கோல்டல் ஹவர்’ என்று சொல்லக்கூடிய சைபர் குற்றம் நடந்த உடனடியாகவும் மிக விரைவாகவும் நிதி இழப்பு தொடர்பான புகார்கள் அளித்தால் அவர்களின் பணத்தை சைபர் க்ரைம் போலீசார் முடக்கி மீண்டும் பணத்தை திரும்ப பெற நவடிக்கை எடுக்க ஏதுவாக இருக்கும். எனவே ஆன்லைன் மோசடிகளில் பணத்தை இழக்கும் நபர்கள் உடனடியாக ‘1930’ என்ற எண்ணில் புகார் அளிக்க வேண்டும் என்று சென்னை பெருநகர காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு வேண்டுகொள் விடுத்துள்ளனர்.