கரூர்: ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கில் மாஜி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் உள்பட 2 பேர் சிபிசிஐடி போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டனர். கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த தொழிலதிபர் பிரகாஷிடம் ரூ.100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலம் அபகரிப்பு மற்றும் கொலை மிரட்டல் புகாரில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், உறவினர் பிரவீன் (28), உடந்தையாக இருந்த வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டர் பிரித்விராஜ் ஆகியோர் கடந்த ஜூலை 31ம்தேதி நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் சகோதரர் சேகரின் முன் ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக, முகாந்திரம் இருப்பின் அவரை கைது செய்யலாம் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தலைமறைவாக இருந்த விஜயபாஸ்கரின் சகோதரர் சேகரை சிபிசிஐடி போலீசார், கரூர் சின்னாண்டாங்கோயில் பகுதியில் உள்ள அவரது வீட்டருகே நேற்று மதியம் கைது செய்தனர். மேலும் தோட்டக்குறிச்சியை சேர்ந்த செல்வராஜ் என்பவரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். கரூர் திண்ணப்பா நகரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு இருவரையும் அழைத்து சென்று போலீசார் 3 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர். பின்னர் மாலை 6.30 மணியளவில் இருவரையும் மருத்துவ பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு போலீசார் அழைத்து சென்றனர்.