சென்னையில் புதிதாக இயக்கப்படும் மின்சார பேருந்துகளில் இதர பேருந்துகளை போல் சிங்கார சென்னை பயண அட்டை, ரூ.1000 பயண அட்டை ஆகியவற்றை பயன்படுத்தலாம் என மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. மின்சார பேருந்துகளில் டீலக்ஸ் பேருந்துகளின் கட்டணமே வசூலிக்கப்படும் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல்முறையாக சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில் ரூ.208 கோடி மதிப்பில் 120 புதிய தாழ்தள மின்சார பஸ்களின் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் தொடங்கி வைத்தார்.
பஸ்களை மின்னேற்றம் செய்வதற்கான கட்டுமான பணிகள், பராமரிப்பு கூடம் உள்ளிட்ட வசதிகளுடன் ரூ.47.50 கோடியில் மேம்படுத்தப்பட்ட வியாசர்பாடி மின்சார பஸ் பணிமனையையும் திறந்து வைத்தார். ஒவ்வொரு மின்சார பஸ்சிலும் முன்புறத்தில் 2, பின்புறம் ஒரு கேமரா பொருத்தப்பட்டு, மகளிருக்கு பாதுகாப்பான பயணம் உறுதி செய்யப்படுகிறது. தற்போது மக்கள் பயன்பாட்டுக்காக தொடங்கி வைக்கப்பட்டுள்ள பேருந்துகள், ஏசி வசதி இல்லாதவை. ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கி.மீ. வரை இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த பஸ்களில் தற்போது டீலக்ஸ் பேருந்துகளில் என்ன கட்டணம் வசூலிக்கப்படுகிறதோ அந்தக்கட்டணமே வசூலிக்கப்படுகிறது.
விடியல் பயணத்திட்டத்தின் கீழ பயணிக்க அனுமதி இல்லை. மகளிருக்கு இந்த பஸ்சில் இலவச பயணம் கிடையாது. அதே நேரத்தில் மாதாந்திர ரூ.1,000 பாஸ் வைத்து இருக்கும் பயணிகள் இந்த பஸ்சில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்களா? என்ற கேள்வி எழுந்த நிலையில், 1000 ரூபாய் பாஸ் வைத்து இருக்கும் பயணிகள் இந்த பஸ்சில் பயணிக்கலாம் என்று சென்னை மாநகர பேருந்து போக்குவரத்து கழக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சிங்கார சென்னை கார்டு வைத்து இருக்கும் பயணிகளும் இந்த பஸ்சில் பயணிக்கலாம் என்று கூறப்படுகிறது.