புதுச்சேரி: புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31ம்தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. நேற்று நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி 2024-25ம் நிதியாண்டுக்கு ரூ.12,700 கோடிக்கான நிதிநிலை (பட்ஜெட்) அறிக்கையை தாக்கல் செய்து பேசியதாவது: நடப்பு நிதியாண்டு முதல் இலவச அரிசி மற்றும் மானிய விலையில் பருப்பு, கோதுமை, சர்க்கரை, சமையல் எண்ணெய் உள்ளிட்டவை ஸ்மார்ட் பொதுவிநியோக திட்டம் மூலம் வழங்கப்படும். ெபாது சேவை மையம் மூலம் குடிமைப் பொருள் வழங்கல் அட்டை தொடர்பான அனைத்து சேவைகளும் இணையதளம் மூலம் வழங்கப்படும். புதிய உணவு பங்கீட்டு அட்டை வழங்கல், பெயர்களை சேர்த்தல், நீக்குதல் மற்றும் உணவு பங்கீட்டு அட்டையை ஒப்படைத்தல் உள்ளிட்ட சேவைகள் பொது சேவை மையம் மூலம் வழங்கப்படும். அரசு பள்ளியில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து இளநிலை கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படும். மாணவர்களுக்கு காலணி, புத்தகப்பை வழங்கப்படும்.
11ம் வகுப்பு மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி மையம் அமைக்கப்படும். பிராந்திய அளவில் 10 மற்றும் 12ம் வகுப்பில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம், ரூ.15 ஆயிரம், ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும். பாடப்பிரிவு வாரியாக 100க்கு 100 மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் கல்லூரி மாணவர்கள் மற்றும் பணிபுரியும் பெண்கள், மின்சார இருசக்கர வாகனம் வாங்க 23 சதவீதம் மானியம் வழங்கப்படும். 500 பேருக்கு தலா ரூ.1 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும். சூரிய ஒளி மின்சாரம் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், ஆதிதிராவிடர், பழங்குடியினர் வீடுகளில் நெட் மீட்டருடன் 2 கிலோ வாட் உற்பத்தி செய்ய 90% விழுக்காடு மானியம் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.