*சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
ஆர்.எஸ்.மங்கலம் : செங்கமடை கிராமத்தில் பிரசித்தி பெற்ற கோட்டையா கோயிலுக்கு செல்லும் சாலை சேதமடைந்து உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்துள்ளதால், சீரமைத்து தரவேண்டும் என பொதுமக்களும் பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆர்.எஸ்.மங்கலம் சனவேலி அருகே செங்கமடை கிராமத்தில் உள்ள கோட்டையா கோயில் இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயம் ஆகும். இந்த ஆலயத்திற்கு வருடம் முழுவதும் வெள்ளி, செவ்வாய் மற்றும் திருவிழா காலங்களில் செங்கமடை மட்டும் இன்றி, சனவேலி,ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை, தேவகோட்டை, தொண்டி, தேவிபட்டினம், பரமக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் இந்த ஆலயத்தை வழிபடுவதற்காக வந்து செல்கின்றனர்.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆலயத்திற்குசெல்லும் சாலை திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சேதமடைந்து காணப்படுகிறது. லேசான மழை பெய்ந்தால் கூட சேரும் சகதியுமாகி விடுகிறது. இதனால் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களும், இப்பகுதியில் உள்ள பக்தர்களும் டூவீலர் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்களும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். ஆகையால் இந்த சாலையை பொது மக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட நிர்வாகம் சீரமைத்து பொதுமக்களுக்கு உதவ வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்களும், பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுபோல் ஆர்.எஸ்.மங்கலம் அருகே புனித அந்தோணியார் கோயிலுக்கு செல்லும் சாலையில் இக்கிராமம் அமைந்துள்ளது. செங்குடி விலக்கிலிருந்து முத்துப்பட்டணம் வரை செல்லும் இச்சாலையில் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலை மிகவும் சேதமடைந்து பள்ளி குழந்தைகளும், வயதானவர்களும் நடந்து செல்ல முடியாத அளவுக்கு கற்கள் பெயர்ந்து மேடு பள்ளங்களாக காட்சியளிக்கிறது. இரவு நேரங்களில் உடல்நிலை சரி இல்லாதவர்களை சிகிச்சைக்கு வெளியூர்களுக்கு கொண்டு செல்வதற்கு சாலை மிகவும் சேதம் அடைந்து இருப்பதால் ஆட்டோ போன்ற வாகனங்கள் கூட வருவதில்லை. இதனால் நோயாளிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து எட்டியதிடல் கிராம தலைவர் அருள்ராஜ் கூறியதாவது: செங்குடியில் இருந்து எட்டியதிடல் வழியாக முத்துப்பட்டணம் வரை செல்லும் இச்சாலை 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. இச்சாலை 15 ஆண்டுகளாக கற்கள் பெயர்ந்து மக்கள் நடந்து செல்ல முடியாத அளவிற்கு மிகவும் சேதம் அடைந்து உள்ளது. இதுகுறித்து ஒவ்வொரு முறையும் ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் அலுவலகத்திலும், தேர்தல் வெற்றி பெற்று வரும் சட்டமன்ற உறுப்பினர்களிடமும் பலமுறை எழுத்து மூலமாகவும் மனுவாக கொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இச்சாலையை சீரமைக்க கோரி பல கட்டமாக போராட்டம் நடத்தியும் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை.
கால் நூற்றாண்டாக இச்சாலை மோசமாக இருந்து வருகிறது. மழைக்காலங்களில் ரோட்டில் தண்ணீர் தேங்கி ஆங்காங்கே குளம்போல் காட்சியளிப்பதால் வயதானவர்கள் ராேடு தெரியாமல் பள்ளத்தில் கீழே விழுந்து செல்கின்றனர். இரவு நேரங்களில் உடல்நிலை சரியில்லாதவர்களை சிகிச்சைக்கு டவுணுக்கு கொண்டு செல்ல ஆட்டாே கூட வருவதில்லை. இதனால் மிகவும்
சிரமப்பட்டு வருவதாகவும்,தற்போது இச்சாலை அருகே பைப் லைன் போடுவதாக சொல்லி ஜே.சி.பி எந்திரம் மூலமாக குழி பறித்த மண் சரியாக மூடாமல் சாலை சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது என்றார்.