காரைக்குடி : ராமநாதபுரம் மாவட்ட ஆர்.எஸ்.மங்கலம் சுத்தமல்லி கிராமத்தில் 400 ஆண்டு பழமையான வாமன கல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது என காரைக்குடியை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.இதுகுறித்து அவர் கூறுகையில், ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள சுத்தமல்லி கிராமத்தில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 3 அடி நீளம், 2 அடி அகலம் கொண்டு வாமன கல் கண்டு பிடிக்கப்பட்டது. ஒருபுறம் வாமன உருவமும், மறுபுறம் கல்வெட்டும் உள்ளது. கல்வெட்டில் 23 வரிகள் இருந்தன. அந்த எழுத்தில் கருங்குடி, சமணகோவில், சுத்தமல்லி, கொங்கணாங்குடி போன்ற ஊர்களின் பெயர்களும் எல்லை திசைகளும் குறிக்கப்பட்டு இருந்தது.
விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஐந்தாவது அவதாரமாக வாமன அவதாரம் கூறப்படுகிறது. இங்கு கண்டறியப்பட்ட கல்லில் வாமனன் நின்ற வண்ணமாக வலது கையில் கமண்டலம், இடது கையில் மேல்நோக்கி விரித்த குடை, தலையில் குடிமியும் இடம் பெற்றுள்ளது. நாயக்கர் காலக்கட்டத்தில் அதிகமாக வாமன சின்னங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
விஷ்ணுவின் அடையாளம், பெருமாள் கோவிலுக்கு நிலம் தானமாக வழங்கப்பட்ட எல்லையை குறிக்கும் அடையாளமாக வைக்கப்பட்டு இருக்கலாம். இது சுமார் 400 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் என கூறலாம். இந்த வாமன கல் அருகே 30 மீட்டர் தூரத்தில் மிகப் பழமையான பெருமாள் கோவில் உள்ளது. ஆவணி மாதம் வாமனர் அவதாரம் எடுத்ததாக கூறப்படுகிறது. ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் பல்வேறு வரலாற்று சிறப்புகள் நிறைந்து காணப்படுகிறது என்றார்.