திருப்பதி: திருப்பதி அலிபிரி சாலையில் ரூ.250 கோடியில் 7 ஸ்டார் ஓட்டலுக்கு அடிக்கல் நாட்டு விழாவை முதல்வர் ஜெகன்மோகன் காணொலியில் தொடங்கி வைத்தார். ஆந்திர மாநிலத்தில் சுற்றுலா பணிகளுக்காக பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் தொடங்கப்பட்டு வருகிறது. அதன்படி, தற்போது தலா ரூ.250 கோடியில் விசாகப்பட்டினம், கடப்பா மற்றும் திருப்பதியில் சுற்றுலா பயணிகளுக்காக 7 ஸ்டார் ஓட்டல்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதனை முதல்வர் ஜெகன்ேமாகன் குண்டூரில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலியில் தொடங்கி வைத்தார்.
இதன் தொடர்ச்சியாக, திருப்பதி மாவட்டம் அலிபிரி சாலையில் 7 ஸ்டார் ஓட்டல்களுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. கலெக்டர் வெங்கடரமணா தலைமை தாங்கி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். விழாவில், கலெக்டர் வெங்கடரமணா பேசுகையில், ‘ மாவட்டத்தில் ஏழுமலையான் கோயில், ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் போன்ற கோயில்கள் உள்ளன. தினமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திருமலைக்கு வருகின்றனர். திருப்பதி மாவட்டம் கோயில் நகரமாக விளங்குகிறது. இதனால், உலகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதனால், மாவட்டம் சுற்றுலா வளர்ச்சிக்கு பங்களிக்கின்றன. இந்த 7 ஸ்டார் ஓட்டல் அமைக்கப்படுவதால் நேரடியாகவும், மறைமுகமாகவும் 1,500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்’ என்றார்.