சென்னை: மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்துக்கு ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த திட்டம் தமிழ்நாட்டின் வரலாற்றில் மாபெரும் திட்டம், எந்தவொரு தகுதியான பளனாளியும் விடுபட்டு விடக்கூடாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று சென்னையில், முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக, மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தினை செயல்படுத்துவது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழ்நாடு அரசினுடைய நிர்வாக வரலாற்றில் மட்டுமல்ல, தமிழ்நாடு வரலாற்றிலும் இவ்வளவு பெரிய திட்டம் இதுவரை உருவாக்கப்பட்டது இல்லை என்று சொல்லும் வகையிலான மாபெரும் திட்டத்தை தொடங்குவதற்கான முதற்கட்ட கூட்டம் இது. ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற நோக்கத்துடன் செயல்படும் நமது ‘திராவிட மாடல்’ அரசின் அனைத்து திட்டங்களுக்கும் ஒரு பொதுநோக்கு உண்டு.
அதுதான் சமூகநீதி. நீதிக்கட்சி காலம் தொடங்கி இன்றுவரை தமிழ்நாட்டை வழி நடத்தும் கோட்பாடுதான், சமூகநீதி. எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்து மகளிர் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்த அரசு கலைஞர் தலைமையிலான திமுக அரசு. இத்தகைய சிறப்பு வாய்ந்த திட்டங்களை எல்லாம், மகளிர் நலனையும், அவர்களது மேம்பாட்டினையும் கருத்தில் கொண்டு செயல்படுத்திக்காட்டிய கலைஞர் அளப்பரிய பணிகளை நினைவுகூரும் வகையிலும், அவரது நூற்றாண்டு விழாவிற்கு மேலும், மேலும் பெருமை சேர்க்கும் விதத்திலும், இந்த மகத்தான மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்’ என பெயர் சூட்டுவது பொருத்தமாக இருக்கும் என கருதி, நமது அரசு இந்த திட்டத்திற்கு கலைஞர் பெயரை சூட்டி மகிழ்ந்திருக்கிறது என்பதை நான் இந்த நேரத்தில் அறிவிப்பதில் பெருமையடைகிறேன்.
மகளிருக்கு மகுடம் சூட்டும் வகையில் மகளிர் உரிமைத்தொகையை மாதம் தோறும் வழங்க அரசு முடிவெடுத்துள்ளது. இல்லற பொறுப்புகளுடன் பணிகளுக்கு சென்று, அதன்மூலம் தங்கள் குடும்பங்களின் உயர்வுக்கு உழைத்து வரும் மகளிரின் உழைப்பை முறையாக அங்கீகரிக்க வேண்டும். இதனை கருத்தில்கொண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு திமுக தேர்தல் அறிக்கையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்தோம். சொன்னதை செய்யத் தொடங்கிவிட்டதன் அடையாளம்தான் இந்த கூட்டம்.
கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின்போது, “தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட சமூகநீதி திட்டங்களிலேயே ஒரு மாபெரும் முன்னெடுப்பாக, வரலாற்றில் நிலைபெறவுள்ள, ஏறத்தாழ ஒரு கோடி குடும்ப தலைவிகளுக்கு, மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கிடும் வகையில் அமைந்திடும் மகளிர் உரிமைத் தொகை” என்ற திட்டத்தை அறிவித்தேன். இந்த திட்டத்தை முறையாகச் செயல்படுத்துவதற்காக 2023-2024ம் ஆண்டு வரவு-செலவு அறிக்கையில் ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்றைய நாள் இந்த திட்டத்தை சீரிய முறையில் செயல்படுத்திட வேண்டிய வழிமுறைகள் குறித்தும் ஒவ்வொரு துறைகளின் பங்களிப்பு குறித்தும், மாவட்ட நிர்வாகத்தின் பொறுப்புகள் குறித்தும் உங்கள் அனைவருக்கும் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் தலைமை செயலகத்தில் ஆற்றவேண்டிய பணிகளான, அரசாணை வெளியிடுதல், வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடுதல் என்று எடுத்துச்சொல்லப்பட்ட ஒவ்வொரு துறைகளுக்கான பங்களிப்பினையும் சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் உரிய முறையில் செயல்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் இத்தகைய ஒரு மாபெரும் திட்டம் இதுவரை செயல்படுத்தப்படவில்லை. இதனை கருத்தில் கொண்டு, இந்த திட்டத்தினை வெற்றிகரமான ஒரு திட்டமாக செயல்படுத்தி காட்டுவதில், மாவட்ட ஆட்சி தலைவர்களாகிய உங்களின் பங்கு முக்கியமானது.
இந்த திட்டம் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ம் நாளன்று தொடங்கப்படவுள்ளது. இந்த திட்டத்தின் பயன்களை பெற கிட்டத்தட்ட ஒன்றரை கோடி விண்ணப்பங்கள் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விண்ணப்பங்களை பெற பொது விநியோக கடை தோறும் சிறப்பு முகாம்களை நீங்கள் நடத்திட வேண்டும். தலைமைச் செயலாளர் தலைமையில் மாநில அளவில் இந்த திட்டத்தை கண்காணிக்கவும், ஒருங்கிணைக்கவும் ஏற்படுத்தப்படவுள்ள மாநில கண்காணிப்பு குழு, தேவைப்படும் ஒருங்கிணைப்பு பணிகளை செய்திட வேண்டும். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என்ற உன்னதமான திட்டத்தை எந்த விதமான புகாருக்கும் இடமளிக்காமல் செயல்படுத்திக் காட்ட வேண்டும் என்று அதிகாரிகள் தொடங்கி அலுவலர்கள் வரை அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
இது சம்பந்தமாக ஏதாவது உதவி தேவையாக இருந்தாலோ, சந்தேகம் இருந்தாலோ, முதலமைச்சர் அலுவலகத்தையோ, இந்த திட்டத்தைச் செயல்படுத்தவுள்ள அமைச்சர் உதயநிதியையோ, என்னையோ கூட எந்த நேரமானாலும் தொடர்புகொள்ளுங்கள். கலைஞர் மகளிர் உரிமைத் தொகையானது ஒரு கோடி பெண்களின் வாழ்க்கைக்கு உதவி செய்யும் உயிர்த்தொகை. அதனை மனதில் வைத்து அனைவரும் அக்கறையுடனும், பொறுப்புணர்வுடனும் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த கூட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, துறை செயலாளர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் கானொலி வாயிலாக மாவட்ட ஆட்சியர்கள், உயர் அதிகாரிகள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
* ரேஷன் கார்டு, ஆதார் இல்லாவிட்டாலும்…
சமுதாயத்தில் உள்ள விளிம்பு நிலை மக்களாகிய சாலையோரங்களில் குடியிருப்போர், பழங்குடியினர், தூய்மை பணியாளர்கள் மற்றும் இதர ஆதரவற்றோர் இந்த திட்டத்தில் பயன் அடைவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிசெய்ய வேண்டும். அவர்களிடம் குடும்ப அட்டை, ஆதார் அட்டை போன்ற தரவுகள் இல்லையென்றாலும் கூட, அவற்றை பெறுவதற்கு உரிய வழிவகை செய்து, இந்த மகளிர் உதவித்தொகை அவர்களுக்குக் கிடைப்பதற்கு உதவி புரிய வேண்டும்.
* யாரெல்லாம் பயன் பெறுவார்கள்
நடைபாதையில் வணிகம் செய்திடும் மகளிர், வயல் வெளிகளில் வேளாண் பணிகளில் ஈடுபடும் தாய்மார்கள், அதிகாலையில் கடற்கரை நோக்கி விரைந்திடும் மீனவ மகளிர், கட்டுமான தொழிலில் பணிபுரியும் மகளிர், சிறிய கடைகள், வணிகம் மற்றும் சிறுதொழில் நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் மகளிர், ஒரேநாளில் ஒன்றுக்கும் மேற்பட்ட இல்லங்களில் பணிபுரியக்கூடிய விளிம்பு நிலையில் வாழும் பெண்கள் என பல்வேறு வகையில் தங்கள் விலைமதிப்பில்லா உழைப்பை தொடர்ந்து வழங்கிவரும் பெண்கள் இந்த திட்டத்தில் பயன்பெறவுள்ளார்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.