மதுரை: மதுரை அருகே, அனுமதியின்றி போராட்டம் நடத்த சென்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே, வி.சத்திரப்பட்டியில் காவல்நிலையம் உள்ளது. இந்த காவல்நிலையம் ஊரில் இருந்து அரை கி.மீ தொலைவில் உள்ளது. இதனைச் சுற்றி சீமைக்கருவேல மரங்கள் உள்ளன. நேற்று இரவு ஏட்டு மட்டும் காவல்நிலையத்தில் பணியில் இருந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த 8 பேர் முகமூடி கும்பல் கம்பி, கம்புகளால் காவல்நிலையத்தில் இருந்த மேஜை, நாற்காலிகளை அடித்து நொறுக்கினர். பின்னர் சீமைக்கருவேல காட்டுப்பகுதி வழியாக தப்பிச் சென்றனர். தகவலறிந்து வந்த மதுரை மாவட்ட எஸ்பி அரவிந்தன், பேரையூர் டிஎஸ்பி துர்காதேவி, உசிலம்பட்டி டிஎஸ்பி சந்திரசேகர் உள்ளிட்ட போலீசார் காவல்நிலையத்தில் ஆய்வு செய்தனர்.
போலீசார் விசாரணையில் வி.வெங்கடாசலபுரம் காலனியில் உள்ள ஒரு கும்பல் வந்து பொருட்களை அடித்து நொறுக்கியது தெரிய வந்துள்ளது. அவர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், சம்பவ இடத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் போராட்டம் நடத்தப்போவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வி.சத்திரப்பட்டிக்கு வந்த ஆர்.பி.உதயகுமார் மற்றும் அவரது ஆதரவாளர்களை என்.முத்துலிங்காபுரம் என்ற இடத்தில் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.