புதுடெல்லி: கனிம வளங்கள் தொடர்பான விவகாரத்தில் கடந்த 2005 ஏப்ரல் 1ம் தேதி முதல் வசூலிக்கப்பட்ட வரி தொகை மற்றும் ராயல்டி ஆகியவற்றை ஒன்றிய அரசு மற்றும் சுரங்க குத்தகைதாரர்கள் மாநில அரசுகளிடம் ஒப்படைக்க வேண்டும். அதனை அவர்கள் அடுத்த 12 ஆண்டுகளுக்குள் வசூலித்து கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டுள்ளது.
கனிம வளங்கள் மீதான வரி விதிப்பதற்கு மாநில அரசுகளுக்கு உரிமை இருக்கிறதா இல்லையா என்பது குறித்து வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வில் நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், ஏஎஸ் ஓகா, பிவி நாகரத்னா, ஜேபி பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா, உஜ்ஜல் புயான், சதீஷ் சந்திர ஷர்மா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மசிஹ் ஆகியோர் அடங்கிய ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த மூன்று மாதங்களாக விசாரித்து வந்தது. இதையடுத்து விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து கனிமங்கள் மீதான ராயல்டி என்பது வரியா? மற்றும் மாநிலங்கள் கூடுதலாக விதிக்கும் வரிகள் சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டதா? ஆகிய கேள்விகளுக்கு விடை காணும் விதமாக உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் எட்டு நீதிபதிகள் கடந்த ஜூலை 25ம் தேதி வழங்கி தீர்ப்பில். அதில், “கனிம வளம் அமைந்துள்ள ஒன்றிய நிலப்பரப்பு என்பது மாநில அரசாங்கத்திடம் உள்ளது. கனிமங்களுக்கான உரிமை அரசாங்கத்திடம் உள்ளது. எனவே கனிம வளங்கள் தொடர்பான உரிமைகளுக்கு மாநில அரசுகள் வரிவிதிக்க தடையில்லை என்று உத்தரவிட்டிருந்தனர். ஆனால் நீதிபதி நாகரத்னா மற்றும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருந்தார்.
இதையடுத்து இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு தரப்பில் மீண்டும் ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “கனிம வளங்கள் வரி மீதான விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் ஜூலை 25ம் தேதி வழங்கிய தீர்ப்பு ஏற்கனவே விண்ணப்பித்தவர்களுக்கு பொருந்துமா?. அல்லது எதிர்காலத்தில் விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டும் பொருந்துமா?. இதுவரை ஒன்றிய அரசு வசூலித்த சுங்க வரி, மாநில அரசுகளுக்கு வழங்க உகந்ததா. அது எப்படி சாத்தியமாகும். எனவே இதுகுறித்து உச்ச நீதிமன்றம் ஒரு விளக்கமான உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விரிவாக விசாரிக்கப்பட்டு கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், மேற்கண்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான எட்டு நீதிபதிகள் நேற்று வழங்கிய தீர்ப்பில், ”கடந்த 2005ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் கனிம வளங்கள் மீதான வரி மற்றும் ராயல்டி ஆகியவற்றை ஒன்றிய அரசு மற்றும் சுரங்க குத்தகைதாரர்களிடம் இருந்து மாநில அரசுகள் வசூலித்துக் கொள்ளலாம். அடுத்த 12 ஆண்டுகளுக்கு தவணை முறையில் இந்த நிலுவைத் தொகையினை மாநில அரசுகள் வசூலித்துக் கொள்ளலாம். இருப்பினும் கடந்த கால நிலுவைத் தொகைக்கு அபராதமோ அல்லது வட்டியையோ மாநிலங்கள் வசூலிக்க கூடாது. இந்த வழக்கில் முன்னதாக நீதிபதி நாகரத்தனா மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால், இன்று (நேற்று) பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில் அவர் கையெழுத்திட மாட்டார் என தெரிவித்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர். உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் ஒன்றிய அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.