கோவை: தமிழ்நாடு சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண் நேற்று மாலை கோவை வந்தார். மேற்கு மண்டல ஐஜி அலுவலக வளாகத்தில், காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில், மேற்கு மண்டலத்தில் குற்றச்செயல்களை குறைப்பது, ரவுடிகள் ஒழிப்பு நடவடிக்கை, போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து காவல்துறை உயரதிகாரிகளின் கருத்துக்களை கேட்டறிந்தார். இதன்பின்னர், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழ்நாடு முழுவதும், குறிப்பாக மேற்கு மண்டலத்தில் குற்றச்செயல்கள் அதிகம் நடைபெறாமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருவதால், போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை, சீர்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
மேற்கு மண்டலம் உள்பட தமிழ்நாடு முழுவதும் ரவுடியிசம் முழுமையாக ஒழிக்கப்பட்டுவிட்டது. சாலை போக்குவரத்து விதிமீறலை குறைக்கவும், சாலை விபத்துக்களை தடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு கூடுதல் டிஜிபி அருண் கூறினார். ஆலோசனை கூட்டத்தில், மேற்கு மண்டல ஐஜி பவானீஸ்வரி, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மேற்கு மண்டல டிஐஜி சரவணசுந்தர், கோவை மாவட்ட எஸ்பி பத்திரி நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.