பெங்களூரு: கன்னட நடிகர் தர்ஷன் தனது ரசிகரான ரேணுகாசாமி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நடிகர் தர்ஷன் சிறை வளாகத்தில் உள்ள புல் தரையில் நாற்காலியில் அமர்ந்து டீ குடித்தபடி, சிகரெட் பிடிக்கும் புகைப்படம் வெளியானது. அவருக்கு அருகே ரவுடி வில்சன் கார்டன் நாகா மற்றும் தர்ஷனுடைய மேலாளராக இருந்த நாகராஜ் ஆகியோரும் அவருடன் அமர்ந்திருக்கும் காட்சிகள் மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் 9 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். முதன்மை கண்காணிப்பாளர் கேசவ மூர்த்தி, கண்காணிப்பாளர் மல்லிகார்ஜுன சாமி உட்பட 9 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறுகையில், இந்த விஷயம் எனக்கு தெரிய வந்த உடனேயே, இதுகுறித்து முறையான விசாரணை நடத்துமாறு காவல் துறை டிஜிபிக்கு உத்தரவிட்டேன்.
இதையடுத்து மூத்த காவல் துறை அதிகாரிகள் சிறையை பார்வையிட்டனர். அவர்கள் நடத்திய விசாரணையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறை அதிகாரிகள் தர்ஷனுக்கு சில சலுகைகள் வழங்கி கவனித்துக்கொண்டது தெரியவந்தது. சிறை வளாகத்தில் சிசிடிவி கேமராக்கள் இருக்கின்றன. ஆனாலும் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாக அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்தார்.