பெரம்பூர்: புளியந்தோப்பு போகி பாளையம் கார்ப்பரேஷன் லைன் பகுதியைச் சேர்ந்தவர் உமாபதி. இவர் மீன்வளத் துறை அலுவலகத்தில் உதவியாளராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி குமுதா(45). இவர்களது மகன்கன் ஜவகர்(24), சஞ்சய்(22). புளியந்தோப்பு காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு ரவுடி பிரிவில் ஜவகர் உள்ளார். இவர் மீது ஏழு குற்ற வழக்குகள் உள்ளன. குடிபோதைக்கு அடிமையான இவர் அவ்வப்போது குடித்துவிட்டு ஏரியாவில் தகராறு செய்து அடிக்கடி சிறைக்குச் சென்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் அதீத குடிபோதையில் ஜவகர் வீட்டிற்கு வந்து தனது தம்பி சஞ்சய்யிடம் குடிப்பதற்கு மீண்டும் பணம் கேட்டுள்ளார். சஞ்சய் பணம் இல்லை என்று கூறவே வீட்டிலிருந்த சிறிய பேனா கத்தியை எடுத்து குடிபோதையில் சஞ்சய் மற்றும் அவரது தாய் குமுதா ஆகியோரை குத்தியுள்ளார்.
இதில் குமுதாவுக்கு வலது கையில் இரண்டு இடத்தில் காயம் ஏற்பட்டது. சஞ்சய்க்கு முதுகு, இடது கை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. இருவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இருவரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மேலும் புளியந்தோப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அதீத குடிபோதையில் இருந்த ஜவகரை கைது செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.