தண்டையார்பேட்டை: புதுவண்ணாரப்பேட்டை ரவுடி கொலையில் 6 பேர் கைதாகியுள்ளனர். இதில் தப்பியோடியபோது கீழே விழுந்த முக்கிய குற்றவாளிக்கு கை முறிவு ஏற்பட்டது. புதுவண்ணாரப்பேட்டை பாலகிருஷ்ணன் தெருவில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவில், எர்ணாவூர் சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த சரித்திர பதிவேடு ரவுடியான லோகேஷை (32) 6 பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்தது. இதில் பழவேற்காடு பகுதியில் பதுங்கி இருந்த 6 பேரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்கள், புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சொட்டை பிரகாஷ் (40), சுரேந்தர் (31), தண்டபாணி (26), மதன்சாமி (28), கார்த்திக் (28), மற்றொரு பிரகாஷ் (27) என்பது தெரிய வந்தது.
அவர்களிடமிருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் முக்கிய குற்றவாளியான சொட்டை பிரகாஷ் தப்பிக்க முயற்சி செய்து தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்ததில் அவருக்கு வலது கை எலும்பு முறிந்தது. அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவனையில் சிகிச்சை அளித்தனர். பின்னர் 6 பேரையும் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.