* ஜாமீனில் வந்தவர் பழிக்குப்பழியாக கொலையா?
* விழுப்புரம் போலீசார் தீவிர விசாரணை
விழுப்புரம் : விழுப்புரம் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் ரவுடி உடல் சடலமாக மீட்கப்பட்டது. கொலை, திருட்டு வழக்கில் தொடர்புடைய இவர் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்துள்ள நிலையில் மற்றொரு ரவுடி கும்பல் பழிக்குப்பழியாக கொலை செய்ததாக கூறப்படுகிறது. போலீசார், அவரது உடலை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் ஜானகிபுரம் கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் சின்னபாபு மகன் சக்திவேல் (30). இவர் மீது கொலை, பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர், இ-பிரிவு ரவுடி பட்டியலில் உள்ளார்.
இந்நிலையில், வழக்கு ஒன்றில் சிறையிலிருந்து கடந்த சில நாட்களுக்கு முன்புதான் ஜாமீனில் வெளியே வந்துள்ளாராம். இதனிடையே நேற்று முன்தினம் ஜானகிபுரம் புறவழிச்சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு இரவு அங்குள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள சிமெண்ட் கட்டையில் படுத்து தூங்கியுள்ளார்.
இந்நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள மழைநீர் குட்டையில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மிதந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் சக்திவேலின் பெற்றோருக்கும் மற்றும் தாலுகா காவல்நிலையத்துக்கும் புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அங்கு தடய அறிவியல் நிபுணர்கள், மோப்பநாய் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கினர். இதுகுறித்து முதல்கட்ட விசாரணையில் போலீசார் கூறியதாவது: கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிடாகத்தை சேர்ந்த பிரபல ரவுடி லட்சுமணன் என்பவருக்கும், சக்திவேல் தரப்புக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
லட்சுமணன் அப்பகுதியில் கொலை மற்றும் ரயில்வே இரும்பு பொருட்களை திருடி விற்பனை செய்வது போன்ற குற்றத்தில் ஈடுபட்டு வந்த பிரபல ரவுடியாவார். இவர்களுக்குள் ஏற்பட்ட முன்விரோத தகராறில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு லட்சுமணன் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் சக்திவேல் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில்தான் ஜாமீனில் வெளியே வந்த சக்திவேல் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். லட்சுமணன் கொலைக்கு பழிக்குப்பழியாக சக்திவேல் ஜாமீனில் வெளியே வந்தபோது அவரை கொலை செய்து எதிர் கோஷ்டி பழித்தீர்த்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து தடயங்களை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த சக்திவேலுக்கு மனிஷா என்ற மனைவியும், 3 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர்.
இதனிடையே சக்திவேல் மரணம் குறித்து தாலுகா காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதில் 26ம் தேதி சக்திவேல் மதியம் 12.30 மணியளவில் வெளியே சென்றுள்ளார். மது அருந்திவிட்டு ஜானகிபுரம் ரயில்வே மேம்பாலம் கட்டை மீது படுத்து தூங்கியவர் சுமார் 12 அடி பள்ளத்தில் கீழே விழுந்து அதில் 2 அடி தேங்கிய குட்டையில் நீரில் மூழ்கி உயிரிழந்திருப்பதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே சக்திவேல் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.