சென்னை: விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்றிருக்கிறார். தவறான செய்திகளை யாரும் நம்ப வேண்டும் என்று தேமுதிக தலைமை கழகம் அறிவித்துள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். வீட்டில் முழு ஓய்வில் இருந்து வருகிறார். அவரை அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த்தும், மகன்கள் விஜய பிரபாகரன், சண்முகபாண்டியன் ஆகியோர் மிகவும் கண்ணும் கருத்துமாக உடன் இருந்து கவனித்து வருகின்றனர். இந்நிலையில் விஜயகாந்த் கடந்த 18ம் தேதி இரவு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டார்.
இருமல், சளி மற்றும் தொண்டை வலியால் பாதிக்கப்பட்டுள்ளதால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக மருத்துவமனை தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. எனினும், தேமுதிக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்றிருக்கிறார். ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்” என்று தெரிவிக்கப்பட்டது. மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். விஜயகாந்த்துக்கு இடைவிடாத மார்பு சளியும், இருமலும் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவருக்கு மூச்சுவிடுவதில் சிரமம் இருப்பதால் அவ்வப்போது செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது என்ற தகவல் வெளியானது. இதனை தேமுதிக தலைமை கழகம் மறுத்துள்ளது.
இது தொடர்பாக தேமுதிக தலைமை கழகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்று இருக்கிறார். அவர் ஓரிரு நாளில் வீடு திரும்புவார். செயற்கை சுவாசம் கொடுக்கப்படுவதாக வரும் செய்திகளை யாரும் நம்ப ேவண்டாம். இது முற்றிலும் தவறான செய்தி. வதந்திகளை யாரும் பரப்பவும் வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. விஜயகாந்த், விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என அவரது ரசிகர்களும், தேமுதிக தொண்டர்களும் விரும்புகின்றனர். அதற்கேற்றவாறு மருத்துவர்கள் குழுவும் விஜயகாந்துக்கு சிகிச்சை அளித்து வருகிறது. நேற்றுடன் அவருக்கு 3வது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.