நன்றி குங்குமம் தோழி
பிப்ரவரி..! வாலண்டைன் மாதம். அதிலும், ஒவ்வொரு ஆண்டும் ‘வாலண்டைன் வாரம்’ பிப்ரவரி 7 ரோஸ் தினத்தில் தொடங்கி, பிப்ரவரி 14 ரோஜாக்களுடனும் காதலுடனும் நிறைவடைகிறது. உண்மையில், காதலைச் சொல்லத் தகுந்த மலர் ரோஜாதான். நேர்த்தியான அழகைக் குறிக்கும் சிவப்பு ரோஜாக்களைப் பயன்படுத்தாத காதலே இல்லை என்றே கூறலாம்..!
அதுமட்டுமா..! ‘‘ரோஜாவை வேறெந்தப் பெயர் கொண்டு அழைத்தாலும் அதே இனிய மணத்தையே தரும்” என்று ரோமியோ அண்ட் ஜூலியட்டில், ஷேக்ஸ்பியர் ரோஜாவைக் கொண்டாடியுள்ளார் என்றால்… ‘‘எ ரோஸ் ஈஸ் எ ரோஸ் ஈஸ் எ ரோஸ்..!” என, சேக்ரட் எமிலி (Sacred Emily) எனும் தனது இலக்கிய நாடகத்தில், ரோஸ் எனும் கதாபாத்திரத்தை ரோஜாவுடன் ஒப்பிட்டுப் பாடியுள்ளார் ஜெர்ட்ரூட் ஸ்டெய்ன். இன்னும் சிறப்பாக, ‘‘ரோஜா மலரே ராஜகுமாரி” என்று தொடங்கி, ‘‘ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்…”, ‘‘ரோஜா ரோஜா…” என்று காதல் ரோஜாவைக் கொண்டாடாத தமிழ் திரையிசையே இல்லை எனலாம்.
இப்படியாக அழகு, காதல், அன்பு, மணம், பெண்மை என காதலிலும், கவிதையிலும் ரோஜாவை கொண்டாடக் காரணம் என்ன..? ரோஜாவுக்கும் காதலர் தினத்திற்கும் உள்ள தொடர்புதான் என்ன..? இவற்றையெல்லாம் தாண்டி, ரோஜாவிற்கென மருத்துவப் பலன்கள் உள்ளன? தெரிந்துகொள்வோம் வாருங்கள்..!
35 மில்லியன் ஆண்டுகளாக, வண்ண வண்ண நிறங்களில் பூத்து நிற்கும் தொன்மையான இந்த மலரில் முன்னூறுக்கும் மேற்பட்ட வகைகள் உண்டு. Rosa x hybrida எனும் தாவரப்பெயர் கொண்ட ரோஜாவின் பிறப்பிடம் ஆசியா. அமெரிக்கா, இங்கிலாந்து, மாலத்தீவுகள், ஈரான், ஈராக் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தேசிய மலராக ரோஜா விளங்குவதுடன், தென் அமெரிக்க நாடான ஈக்வெடார், ரோஜா உற்பத்தியில் உலக அளவில் முன்னிற்கிறது.
சீனா, கொரியா, ஜப்பான் நாடுகளில் மூலிகை மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வந்த Rosa rugosa எனும் ஆசிய ரோஜாதான், மத்திய ஆசியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில் பல துணைப் பெயர்களுடன், பற்பல நிறங்களுடன், பிரத்யேக மணத்துடன் விளைவிக்கப்படுகிறது. Rosa என்ற லத்தீன் பெயர் கூட, பெர்சிய மொழியிலிருந்துதான் பெறப்பட்டதாம்.
ரோசாப்பூ, முளரி, தாருணி, குலாப், குலாபி, ஷதாபத்ரி என பலவாறு அழைக்கப்படும் ரோஜாவிற்கு பன்னீர்ப்பூ, சிற்றாமரை என்ற சிறப்புத் தமிழ் பெயர்களும் உண்டு. எப்போதும் நாம் பார்த்து ரசிக்கும் ரோஜாப் பூக்களில், அழகிய வண்ணங்கள் நிறைந்த அடுக்கடுக்கான ரோஜா இதழ்கள் தவிர, இதழ்களைச் சுற்றிலும் பச்சை நிறத்தோல் போன்ற செபல்களும், நடுவில் மகரந்தமும், விதைகளைக் கொண்ட ‘Rose hips’ எனும் அடிபாகமும், கீழே உள்ள கூரிய முட்களும் கொண்ட மலராக ரோஜா இருக்கிறது. பெரும்பாலும் குற்றுச் செடியாக வளரும் ரோஜாவில், படரும் செடி வகைகளும், மர வகைகளும் கூட உண்டு.
கண்களுக்குக் குளிர்ச்சியையும் மனதிற்கு மகிழ்ச்சியையும் தரும் மணமிக்க இந்த ரோஜாப்பூக்கள் காதலுக்கு மட்டுமே அடையாளமானவை அல்ல. இதழ்கள், இலை, தண்டு என ஒவ்வொன்றுமே மருத்துவ குணங்கள் நிறைந்தது. துவர்ப்பும் இனிப்பும் சேர்ந்த, சுவை கொண்ட ரோஜா இதழ்களில், ஃபைட்டோ-ஆக்சிடெண்டுகளான டெர்பீன்கள், டானின்கள், பெக்டின்கள், பாலி-ஃபீனால்கள், அந்தோ-சயனின்கள், மிர்சீன், ஃபீனாலிக் அமிலம், எல்லாஜிக் அமிலம்,வைட்டமின்கள் ஏ, சி, ஈ, இரும்புச்சத்து, கால்சியம் உள்ளிட்ட தாவரச்சத்துகளும் நறுமணம் மிக்க ஆவியாகும் எண்ணெய்களும் நிறைந்துள்ளன.
ரோஜா இதழ்களின் அடிபாகங்களில் அதிகளவு சிட்ரிக் அமிலமும் (வைட்டமின் சி), கரோட்டினாய்டுகள், டோகோஃபிரால்கள், வாசனை மிக்க ஆவியாகும் எண்ணெய்கள் மற்றும் அத்தியாவசியக் கொழுப்பு அமிலங்கள் ஆகியனவும் நிறைந்துள்ளன. கொத்து கொத்தான இலைகளிலும் தண்டுகளிலும் தாவரச்சத்துகள் நிறைந்துள்ளது என்றாலும், அதிகப் பயன்பாட்டில் உள்ளவை இலைகள் மற்றும் அடிபாகங்களே. ரோஜா இதழ்கள் மற்றும் அடிபாகங்களின் நோயெதிர்ப்புத் திறன், அழற்சி எதிர்ப்புப் பண்பு, வலி நிவாரணம், சர்க்கரை அளவு கட்டுப்பாடு, புற்று செல்களைக் கட்டுப்படுத்தும் தன்மை போன்ற இன்னும் பிற மருத்துவ குணங்கள் தற்சமயம் ஆய்வில் உள்ளன.
வாய்ப்புண், வயிற்றுப்போக்கு, பசியின்மை,செரிமானமின்மை, கல்லீரல் நோய்கள், குடல் அழற்சி, மலச்சிக்கல், சிறுநீர்த் தொற்று, சிறுநீரக கல் போன்றவற்றுக்கு ரோஜா இதழ்கள் அருமருந்தாக விளங்குகிறது. அத்துடன் காய்ச்சல், சளி, தொண்டை வலி, அலர்ஜி, ஒற்றைத் தலைவலி, தோல் மற்றும் கண் நோய்களைக் கட்டுக்குள் வைக்கவும், மாதவிடாய் பிரச்னைகளுக்கு சிறந்த தீர்வாகவும் உள்ளது. போதை பழக்கத்தால் கல்லீரல் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ரோஸ் ஹிப்ஸ் வலி நிவாரணியாகவும், வலிப்பு நோய்க்கான மருந்தாகவும் பயன் அளிக்கிறது.
நான்காயிரம் ஆண்டுகளாக ரோஜா இதழ்கள் மற்றும் மொக்குகளில் தயாராகும் தேநீரை, தேன் சேர்த்து பருகியுள்ளனர் சீனர்கள் மற்றும் ஜப்பானியர்கள். ‘Mei Gui Hua’ எனப்படும் கலோரிகளற்ற இந்த மூலிகை பானம், புத்துணர்ச்சியைத் தருவதுடன், உடல் எடையையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது என்றும் கல்லீரல் மற்றும் மண்ணீரல் பாதிப்புகளுக்கு நிவாரணமளிக்கிறது என்றும் கூறுகிறது சீன மருத்துவம்.
ரோஜாப்பூவிலிருந்து தயாரிக்கப்படும் குல்கந்து, அதன் இனிப்பு சுவையால் அனைவரையும் கவர்ந்திழுப்பதுடன் தூக்கமின்மை, உடற் சோர்வு, பசியின்மை, செரிமானமின்மை, மலச்சிக்கல் ஆகியவற்றைப் போக்குகிறது. அத்துடன் இதயத்திற்கு வலிமை தரும் மருந்தாகவும் ஆண்மை விருத்தியாகவும் பயனளிக்கிறது. ரோஜா இதழிலிருந்து கிடைக்கும் ரோஸ் வாட்டர், பருக்கள், மருக்கள், தழும்புகள் ஆகியவற்றைப் போக்கி, சரும அழகை கூட்டுவதுடன், சரும அழற்சிகளைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
‘ரோஸ் அரோமா தெரபி’, மனதை அமைதிப்படுத்தவும், தூக்கமின்மை, மன அழுத்தம், மனச்சோர்வு, பதட்டநிலை, மறதி நோய் மற்றும் மூளைத்தேய்வு நோய் ஆகியவற்றிலிருந்து விடுபடவும் உதவுகிறது. இதழ்களிலிருந்து பன்னீர், ரோஸ் எசென்ஸ், ரோஸ் சர்பத் தயாரிக்கப்படுவது போலவே, ரோஜா பூவிலிருந்து பெறப்படும் அத்தர் என்கிற நறுமண எண்ணெய் கொண்டு, வாசனை திரவியங்களும், க்ரீம்களும், முக அலங்காரப் பொருட்களும் பெருமளவு தயாரிக்கப்படுகின்றன. எந்தவொரு இயற்கைப் பொருளைப் போலவே, ரோஜாவிலும் ஒவ்வாமையால் சரும அழற்சி, மூச்சுத்திணறல் ஒருசிலருக்கு ஏற்படக்கூடும் என்பதையும் இங்கே நினைவில் கொள்ள வேண்டும்.
அழகிய வண்ணங்களைக் கொண்ட இந்த ரோஜாக்களின் ஒவ்வொரு நிறமும், ஒவ்வொரு பொருளைத் தருகிறதாம். சிவப்பு ரோஜாவுக்கு நேர்த்தியான அழகு என்ற பொருளால், காதலை வெளிப்
படுத்த இந்த நிறத்தை காதலர்கள் பயன்படுத்துகின்றனர். ரோஸ் நிறம் கருணை, நேர்த்தி, அழகு ஆகியவற்றைக் குறிக்கின்றன. மஞ்சள் வண்ண ரோஜாக்கள் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளிப்பவை என்பதுடன் நட்புணர்வையும் வெளிப்படுத்த பயன்படுத்தப்படுகின்றன.
வெள்ளை ரோஜாக்கள் தூய்மையை குறிக்கின்றன. ஊதா நிறம் பாரம்பரியத்தைக் குறிப்பதாகவும், ராஜ குடும்பத்துடன் தொடர்புடையதாகவும் கருதப்படுகிறது. ஆரஞ்சு நிறப் பூக்களோ, இனிமை மற்றும் கவித்துவமான காதலையும் பிரதிபலிக்கின்றன என்றால், அடர்த்தியான ஆரஞ்சு வண்ண ரோஜாக்கள் நன்றியையும், மதிப்புணர்வையும் வெளிப்படுத்துகிறதாம். இப்படி, ரோஜாவின் வண்ணங்கள் பற்பல குணங்களை குறிக்கிறது என்றால், அவற்றின் முட்கள் வாழ்க்கைப் பயணத்தில் ஏற்படும் தடங்கல்களை நமக்கு உணர்த்துகின்றன.
குறிப்பாக காதலுடன் பயணிப்பதாலேயே, காதலைக் கொண்டாடும் காதலர் தினத்தன்று, ரோஜாக்கள் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. காதலைத் தாண்டி ரோஜாக்களை அதன் சிறப்புகளுக்காக கொண்டாடியவர்கள் சீனர்களும், அராபியர்களும். பண்டைய ரோமானியர்கள், தங்களது கட்டிடங்கள், அறைகலன்கள் மற்றும் தங்களை அலங்கரித்துக் கொள்ள ரோஜாக்களை மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளனர். அவர்களது ராஜ விருந்துகளில் ரோஸ் ஹிப்ஸ் உயரிய உணவாக இருந்துள்ளது. இதற்காகவே, ரோஜா தோட்டங்களை ரோமானிய அரசு ஊரெங்கும் நிறுவியதால், உணவை விளைவிக்க முடியாமல், எளிய மக்கள் வறுமையில் வாடியதாகவும் குறிப்புகள் உள்ளன.
மார்க் ஆண்டனிக்கு தன்னை எப்போதும் நினைவூட்ட, கிளியோபாட்ரா வரவேற்பறையில் ரோஜா இதழ்களை நிறைத்து வைத்திருப்பாராம். முகலாய அரசர்கள் ரோஜாக்களை காதலுடன் பெருவாரியாகப் பயன்படுத்தியதும், ஜவஹர்லால் நேரு ரோஜாவை தனது வெள்ளை கோர்ட்டில் குத்திக்கொண்டு காணப்பட்டதும் நாமறிந்த வரலாறு.“காதலர் தினத்திற்காக” காத்திருந்து, ‘‘மலர்களின் அரசி” எனக் கொண்டாடப்படும், ரோஜா மலருடன் காதலைச் சொல்பவர்களுக்கு இன்னுமொரு சிறப்புத் தகவல், ‘‘ஹேப்பி ரோஸ்” என்பது, அனைத்து நிறங்களும் நிறைந்த விலைமதிப்புள்ள ரோஜா பூக்களின் கூட்டம்..! ஹேப்பி ரோஸ் போல, காதலர்களின் காதலும் வண்ணங்கள் நிறைந்ததாக மாறட்டும். காதலர் தின நல்வாழ்த்துகள்.!
(இயற்கைப் பயணம் நீளும்..!)
டாக்டர்: சசித்ரா தாமோதரன் மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்